Saturday, July 2, 2011

மன்மதன் - சிறுகதை

-ஜெயமோகன்


காரை நிறுத்திவிட்டு முன்மதியவெயிலில் கண்கூச இறங்கி கோயிலை நோக்கி நடந்து சென்று கற்கள் எழுந்துகிடந்த செம்மண் சாலையில் நின்று  கண்களின் மீது கைவைத்து கோபுரத்தை அண்ணாந்து பார்த்தான். சுதைச்சிற்பங்கள் தங்கள் காலடியில் நிழல் சிந்த ஒன்றுமீது ஒன்று ஏறிச்சென்று கலசங்களை அடைந்த சரிவுப்பரப்பாக கோபுரம் கருகிய நிறத்தில் எழுந்து நின்றது. தேவகோட்டங்களில் பெருமாளின் பல்வேறு மூர்த்தங்கள் கைகள் பரப்பி விழித்து நிற்க அவற்றில் மாடப்புறாக்கள் ஒண்டியமர்ந்திருந்தன.


கிருஷ்ணன் சட்டையை இழுத்துவிட்டபடி கோபுரவாசலை நோக்கிச்சென்றான். மிகப்பழைய கோயில், திருப்பணிகள் நடந்தும் பல வருடங்களாகியிருக்கலாம். எல்லா கோபுரங்களையும்போல அதுவும் மண்ணுக்குள் புதைந்திருந்தது. கோபுரவாசலின் கால்பட்டு அம்மி போல தேய்த கல்படிகள் சாலையைல் விடக் கீழே இருந்தன.  கனத்த இரும்புச்சங்கிலிகளும் பித்தளைக்குமிழ்களும் வரிவரியாக விரிசலிட்ட மரச்செதுக்குச் சிற்பங்களும் கொண்ட உயரமான மரக்கதவுகள் இரும்புக் கீல்களில் சிக்கி கற்சட்டத்தில் தொற்றிக்கொண்டு சாய்ந்து  நின்றன. புஷ்பயட்சி காவல்காத்த கல்நிலையில் நிறைய வெற்றிலைச்சுண்ணாம்பு தீற்றப்பட்டிருந்தது. ஒரே ஒரு பிச்சைக்காரக் கிழவர் உள்ளே உயரமான கற்திண்ணையில் பொக்கணத்துடன் அமர்ந்து எதையோ மென்றுகொண்டிருந்தார். ஆர்வமே இல்லாத பழுத்த கண்களால் அவனை பார்த்தார்

கோயில் திறந்துதான் கிடந்தது. அதை மூடவே முடியாது என்று கிருஷ்ணனுக்குத் தோன்றியது. கருவறையையும் உள்மண்டத்தையும் மட்டும் மூடுவார்கள் போல. தென்பாண்டிநாட்டு கோயில்களில் சிற்பங்கள் எப்போதும் முகமண்டபத்திலும் வசந்தமண்டபத்திலும்தான் இருக்கும். அவை மூடபட்டிருக்க வாய்ப்பில்லை. கம்பிவேலி போடப்படாமல் இருக்க வேண்டும். இல்லை என்றுதான் சண்முகம் சொல்லியிருந்தான். செருப்பை கழட்டிப்போடும்போது திரும்பவரும்போது அது இருக்குமா என்ற எண்ணம் மெல்லிதாக எழுந்தது. கிழவரிடம் சொல்லலாமா, வேண்டாம்.

கோயிலுக்குள் மனிதநடமாட்டமே இருப்பதாகத்தெரியவில்லை. அவன் தன் நிழல் மௌனமாகக் கூடவர சரிந்தெழுந்த கற்பாளங்களாலான தரை மீது மெல்ல நடந்தான். சிலநாட்களுக்கு முன்பு மழைபெய்திருக்கவேண்டும், கல்லிடுக்குகளில் புற்கள் பசுமையாக பீரிட்டிருந்தன. கற்பாதை ஓரங்களில் எழுந்த நெருஞ்சியும் பசுமையாகவே இருந்தது. கிருஷ்ணன்  நிழல்கள் செறிந்து தூண்களின் காடாக விரிந்துகிடந்த கோயிலுக்குள் கண்ணோட்டி நோக்கினான். யாருமே இல்லை. அத்தனை காலியாக அது இருப்பது பிரமிப்பாகவும், கூடவே அது அப்படித்தான் இருக்கமுடியும் என்பதுபோலவும் இருந்தது. அந்த அமைதியின் ஒரு பகுதிபோல குர்ர் குர்ர் என்று புறா குறுகும் ஒலி கேட்டுக்கொண்டிருந்தது.

பிரம்மாண்டமான் கோயில். ஏழெட்டு ஏக்கர் பரப்பு இருக்கும். நான்கு திசைக்கோபுரங்கள். யானைவரிசை போல கருங்கல்லாலான நாலாள் உயர சுற்றுமதில். உள்ளே மங்கிப்போன நாமங்களுடன் சிறுமதில். இரு மதில்களுக்கும் நடுவே கோணலாக வளைந்து நடடமிட்டு நின்ற தென்னைமரங்களும் கீழே அவற்றின் ஓலைகளும் மட்டைகளும் சிதறிக்கிடக்க ஊடே சில அரளிப்புதர்களும் மந்தாரைகளும் கொண்ட நந்தவனம். இடதுபக்கம் ஒரு பெரிய தெப்பக்குளம். ஏரிக்கரை பனைமரக்கூட்டம் போல தூண்கள் எழுந்து வரிசையமைத்த கல் மண்டபம் சூழ  பிளாஸ்டிக் குப்பைகள் அடித்தரையின் பச்சைப்பாசி வண்டலில் மிதக்க, நீரோடிய கறைகள் உலர்ந்த படிக்கட்டுகளுடன் வெறிச்சிட்டுக் கிடந்தது அது.ஒரு சிறிய பறவை சிர்ர்ர் என்று சிறகதிர தென்னையில் இருந்து காற்றில் சறுக்கி இறங்கி குளத்து மதிலில் அமர்ந்தது.

கிருஷ்ணன் நின்றான். சுற்றி வருவதில் பொருளில்லை. உள்ளே சென்று சிலைகளைப் பார்க்கவேண்டியதுதான். அவன் திரும்பி முகமண்டபத்தருகே வந்தான். ஒளியைப்பார்த்து வந்ததனால் உள்ளே நிறைந்திருந்த இளம் இருட்டு கண்களை மறைத்தது. கண்கள் பழகியபோது நீருக்குள் இருந்து பெரிய மீன்கள் எழுந்து வருவது போல கரிய சிலைகள் இருட்டிலிருந்து எழுந்து தெரிந்தன. இரண்டாளுயரமான பெரிய வழவழப்பான கற்சிலைகள். அவன் எந்தச்சிலையையும் பார்க்காமல் மொத்தமாக அந்தச் சிற்ப வெளியை பார்த்தபடி ஒருசில கணங்கள் பிரமித்து நின்றிருந்தான்.

”யாரு?” என்ற பெண்குரல் கேட்டு திடுக்கிட்டு திரும்பினான். குதிரைக்காரன் சிலைக்கு அப்பாலிருந்து அந்தப்பெண் இறங்கி இடுப்பில் செருகிய முந்தானையை எடுத்து இழுத்துவிட்டுக்கொண்டு, நெற்றியில் சரிந்த கூந்தலிழையை ஒருகண நேர நளினமான அசைவால் சரிசெய்தபடி கேட்டாள். கிருஷ்ணனுக்கு கண்டா மணியோசை போல மனம் அதிர்ந்தது. அச்சிலைகளில் ஒன்று இறங்கியது போல் இருந்தாள் அவள்.

அவளுடைய கன்னங்கரிய நிறத்துக்கிணையாக கிருஷ்ணன் கண்டதில்லை. தீட்டப்பட்ட கருங்கல்லில் மட்டுமே உருவாகும் உறுதியான பளபளப்பான கருமை. அவனளவுக்கே உயரமாக திடமான தோள்களும் நிமிர்ந்த தலையுமாக நின்றாள்.

”இல்ல…இங்க சிலைகள்…” அவன் கண்கள் பரபரப்பு கொண்டு அவளை அள்ள முயன்றன. நல்ல சிற்பத்தைப் பார்க்கும்போது எப்போதுமே உருவாகும் பரபரப்பு அது. பின்னர் சொல்லிக்கொள்வான், இல்லை பதற்றப்படாதே, மெதுவாகப்பார், அணுவணுவாகப்பார், பார்த்தவற்றை நினைவில் நிறுத்தியபின்னர் ஒரு புள்ளியிலிருந்து கண்களை விலக்கு. குறுக்காக சிந்தனைகளை ஓடவிடாதே. சிற்பத்துக்கு உன் மனதை அளித்துவிடு….

ஆனால அந்த முதற்பரவசப் பரபரப்பே சிற்பம் அளிக்கும் பேரனுபவம். அதன்பின் உள்ளது அந்த ஒட்டுமொத்த அனுபவத்தை சிறிய துண்டுகளாக ஆக்கி விழுங்கும் முயற்சி மட்டுமே.பாவனால் அவளை பார்க்கவே முடியவில்லை. கண்ணிலிருந்து அவள் வழுக்கி அவ்ழுக்கி விழுவதுபோல, அல்லது கண்ணை நிறைந்து பெரும்பகுதி மிச்சம் இருப்பதிபோல. எத்தனை பேரழகி! அவளுடைய மூதாதையர் இந்த கோயிலில் இருந்திருப்பார்கள். இச்சிலைகளை அவர்களைப் பார்த்தே வடித்திருப்பான் சிற்பி.

அப்பழுக்கற்ற வடிவ கச்சிதம் கொண்ட மகத்தான உடல். துதிக்கை என உருண்டு கனத்த தொடைகள். இரு மடிப்புவளைவுகள் கொண்ட ஒடுங்கிய வயிறு. இறுக்கமான உருண்ட சிற்றிடையில் வியர்வையின் மெல்லிய ஈரம். அவன் கண்களை நிறைத்து அவன் பிரக்ஞையை நிறைத்து அவனை முழுமையாக்கிய மார்புகள். இரு இளநீர்க்காய்களைப்போல. நெருக்கமாக, உருண்டு ஒன்றை ஒன்று மெல்ல முட்டி ஒரு மென்மையான குழியை உருவாக்கியபடி. மெல்ல அதிர்ந்த ஈரமான குழி. எத்தனை அற்புதமான முலைகல். மூங்கில்போன்ற கைகளால் இரு பக்கமும் எல்லையிடப்பட்டு, பாலைநில மணல்வரிகள் போலத்தெரிந்த விலாவெலும்புகளுக்கு மேலே மெல்ல தொற்றியமர்ந்தவை போல…மென்மையையும் ஈரத்தையும் கொடு செய்யப்பட்ட உருண்ட மூன்றுவரி ஓடிய நீள் கழுத்து…

சிற்பங்களைக் காண ஆரம்பித்த இந்த இருபதாண்டுகளில் அவன் அவை கலைஞனின் இலட்சியக் கற்பனைகள் , அத்தகைய பெண்கள் ஒருபோதும்  பூமியில் இருக்க முடியாதென்றே எண்ணியிருந்தான். ஆனால் அவன் கண்முன் ஒரு பரிபூரண இலக்கணம் கொண்ட சிற்பம் உயிருடன் நின்றுகொண்டிருந்தது. நீள்வட்ட முகத்தில் மையமாக கூர்மைபெற்ற சிறுநாசி. அதன் கீழே வாடிய மலரிதழ்போல சிறிய கருஞ்சிவப்புக் குமிழுதடுகள். மேலுதட்டின் மென்மையான ஒடுங்கலுக்குக் கீழே கீழுதட்டின் சிறிய பிதுங்கல். ஒளி பிரதிபலித்த கன்ன வளைவு. என்ன கருமை! சில பண்டாரங்களின் பழமையான திருவோடுகளுக்கு மட்டுமே அந்த பளபளக்கும் கருமையைக் கண்டிருக்கிறான். சிறந்த ஓவியன் அனாயசமாக இழுத்த கோடுபோல மூக்கும் புருவமும் இணைந்த வளைவு. பளபளக்கும் தகடாக நெற்றி. அலையலையக இறங்கி பனங்குலைபோலத் தோளில் கனத்த குழல்த்தொகுதி. என்ன பிழை, என்ன குறை…இல்லை ஏதுமில்லை. முழுமை….பிசிறற்ற முழுமை.

அவள் ”இன்னமே சாயங்காலம் அஞ்சுமணிக்குத்தான் கோயில தொறப்பாங்கய்யா” என்றாள். அந்த திண்ணையில் அவள் அரும்புகளை பெரிய வாழையிலையில் குவித்துக் கட்டிக்கொண்டிருந்தாள். விரல்கள். உள்ளங்கைக்கு வாழைப்பூவின் உட்பக்க நிறம். மணிப்புறாவின் அலகு நிறத்தில் நகங்கள். முழங்கையில் கரிய சருமத்தில் ஒரு நரம்போ எலும்புமுண்டோ தெரியவில்லை. கனத்த தாமரைக்கொடிபோல அவை குளிர்ந்த வழவழப்புடன் உருண்டிருந்தன. அவள் அவன் பார்வையைக் கண்டு தன் முந்தானையை மேலும் நன்றாக இழுத்து விட்டாள். அவளுடைய மார்புகள் மெல்ல அசைந்தபோது அவன் அகத்தில் கட்டிடங்களும் கோட்டைகளும் அதிர நிலம் நடுங்கும் அனுபவம் ஏற்பட்டது. அவை சாதாரணமாக பெண்முலைகள் அசைவதுபோல மென்மையாகத் ததும்பவில்லை, இரு செப்புகள் அசைவதுபோல் இறுக்கமாக  அசைந்தன.

அவள் அவன் பார்வையால் பெரிதாகப் பாதிக்கப்படவில்லை. பொது இடத்திலேயே புழங்குபவளாக இருக்கவேண்டும். பூகட்டி விற்கிறாள் போல. ”இல்ல, சிற்பங்களை பாக்கணும்தான் வந்தேன்…சாமி கும்பிடணும்னு இல்லை… சிலைகள் இருக்கிற மண்டபங்கள் தெறந்துதானே இருக்கும்?”

அவள் ”ஆமாங்கய்யா” என்று தலையசைத்தாள். எந்த நகையுமே இல்லை. கழுத்தில் ஒரு மஞ்சள்கயிறு மட்டும்தான். காதுகளில் இரு பிளாஸ்டிக் கம்மல்கள். ”செலைகளை பாக்கலாமா” அவள் ”இருங்க சாமி” என்று திரும்பி ஓடினாள். அவளுடைய பின்பக்கத் திரட்சி அவள் ஓடியபோது குதிரையின் புட்டங்கள் போல இறுகி அசைந்தது. எளிதாக மான்போல தாவி கல் மேடையேறி மறைந்தாள்.

எங்கே செல்கிறாள்? எங்காவது சாவி வாங்கச் செல்கிறாளா? மெல்ல அவன் பிரமையில் இருந்து மீண்டான். எப்பேற்பட்ட பெண்! தோளில் கிடந்த காமிரா குறித்த பிரக்ஞை அப்போதுதான் வந்தது. அவளை கண்டிப்பாக புகைப்படம் எடுக்க வேண்டும். ஆனால் புகைப்படத்தில் இந்த பரிபூரணம் ஒருபோதும் பதியப்போவதில்லை. அது நிழலையும் ஒளியையும்தான் காட்டும். கருமையை சூழலே விழுங்கிக்கொள்ளும்.  அதைப் பதிவுசெய்ய ஓவியனின் தூரிகை வேண்டும். அவளுடைய சருமத்தில் வெளிப்பட்ட அந்த ஒளியை இலைக்குருத்துக்களில் மட்டுமே அவன் கண்டிருக்கிறான். அதை எபப்டி காமிரா பதிவுசெய்யும்? ஒருகணம் அவளை அவன் நிர்வாணமாகக் கண்டான். அவனுடைய பிரக்ஞை ஸ்தம்பித்துவிட்டது. முழுமை என்ற தனிச்சொல்லாக அகம் அப்படியே நின்றுவிட்டிருந்தது.  பின்னர் படபடப்புடன் மெல்ல திண்ணையில் சாய்ந்து அமர்ந்துவிட்டான்.

அவளுடைய முழுமையான உடல் மேல் பட்டுத்துணிபோல பரவிப்பரவி வழிந்தாலும்கூட அவளுடைய மார்புகளில் இருந்து ஒருகணம்கூட தன் பிரக்ஞையின் மையம் விலகவில்லை என உணர்ந்தான்.சிற்பங்களில் எப்போதுமே செப்புகவிழ்த்ததுபோல பெரிதாக திரட்சியாக செதுக்குவார்கள். இணைக்குவைகளாக, ஒன்று பிறிதொன்றுபோல அவை நெருங்கியிருக்கும். மனிதப்பெண்களின் முலைகள் ஒருபோதும் அப்படி இருப்பதில்லை. அவை மேலிருந்து சற்றே வழிந்து இரு பெரிய நீர்த்துளிகள் ததும்பி நிற்பது போலத்தான் இருக்கும். பெரும்பாலும் வலது முலை பெரிதாக சற்றே கீழிறங்கியிருக்கும். ஆனால் எளிய நீல ஜாக்கெட்டுக்குள் அவளுடைய முலைகள் சிற்பக்கல்முலைகள் போலவே இருந்தன.

பேச்சொலி கேட்டது. அவள் எவரையோ கூட்டிவருகிறாள் என்று எண்ணியதுமே அவனுக்குப் புரிந்துவிட்டது. கைடு என்று யாரையோ கொண்டுவருகிறாள். எரிச்சலுடன் இது ஏன் தனக்கு தோன்றாமல் போயிற்று என எண்ணினான். இனி அவள்மீது பெய்து கொண்டிருக்கும் அவனுடைய உள்ளம் சிதறிக்கொண்டேதான் இருக்கும். ஒரு ஆண் கூடவே இருப்பதென்பது முற்றிலும் வேறு விஷயம். கசபுடன் எழுந்தான். ஒரு கரிய இளைஞனுடன் அவள் புஜங்களைப் பற்றி சிரித்துப்பேசிக்கொண்டு கூடவே வந்தாள். அவர்களின் உறவு அப்போதே தெரிந்துவிட்டது. அவள் கழுத்தின் தாலியை அவன் நினைவுகூர்ந்தான்.

அந்த இளைஞன் சிற்பங்கள் செறிந்த தூண்கள் வழியாக  வந்தபடியே ”கும்பிடறேன் சாமி” என்றான். அவன் கூறிய முறையில் ஏதோ தவறிருந்தது. ”வணக்கம்…” என்றான் கிருஷ்ணன் ”நான் சும்மா சிற்பங்களை பார்த்துட்டு போலாம்னுதான் வந்தேன்…” இவன் வாட்ச்மேனா கைடா?

”எங்கூட்டுக்காரரு சாமி”என்றாள் அவள் ”நல்லா எல்லாத்தையும் சொல்லுவாரு” அவள் இதழ்களுக்குள் இருந்து உப்புப்பரல்கள்கள் போல வெண்பற்கள் மின்னிச்சென்றன. அந்த சாதாரணச் சொற்களுக்கே ஏன் அந்த நாணமும் புன்னகையும் என்று தெரியவில்லை. அவன் மேல் அவளுக்கு அபாரமான காதல் இருக்கவேண்டும், அவன் புஜங்களை அப்போதும் லேசாக தொட்டிருந்தாள். அவனுடன் இருக்கையில் அவனைத் தொட்டுக்கொண்டே இருப்பாள் போல. அவனே அந்த தொடுகையால் கொஞ்சம் சங்கடமடைந்தவனைப்போல ”எல்லாத்தையும் காட்டிடறேன் சார்” என்றான்.

”இல்லப்பா…நான்..” என்றான் கிருஷ்ணன். அவனது தயக்கத்தைப் பார்த்து அவன் ”தொழிலைப்பாத்துட்டு நீங்க விருப்பப்பட்டா காசுகுடுத்தாபோரும் சார்” என்றான். என்ன ஒரு தன்னம்பிக்கை. பெரும்பாலான கைடுகளுக்கு நூறு சொற்றொடருக்குள் தெரிந்திருக்கும். அவற்றை அப்படியே ஒப்பிப்பார்கள். பெரும்பாலான கதைகள் அபத்தமாக இருக்கும். கிருஷ்ணன் ”சரி… சாவி வேணுமா?” என்றான்

”இல்லசார்..இங்கெல்லாம் பூட்டறதே கெடையாது” என்றான். கிருஷ்ணன் முன்னே சென்றான். அந்த இளைஞனின் முகவாய் அமைப்பில் ஏதோ சின்ன பிழை. அல்லது கழுத்திலா? மிகவும் சாதாரணமான முகம்தான் ஆனால் ஒரு வசீகரமிருந்தது. கன்னங்களில் புகைபடிந்தது போல மென்மையான தாடி. சுருண்ட கலைந்த தலைமயிர். மையத்தில் பூனைமயிராக இருந்து வாயோரங்களில் கொஞ்சம் கனத்த மென்மீசை. ஆனால் அவன் முகத்தில் ஏதோ ஒன்று இல்லை.

கிருஷ்ணன் சட்டென்று திரும்பியபோது அவள் அவன் நெற்றியை தன் முந்தானையால் ஒற்றுவதைக் கண்டான். அவள் அவன் திரும்பியதும் சுதாரித்து ”ம்ம்” என்றாள். அவன் கிருஷ்ணனை நோக்கி வந்தபடி ”இது பதினொண்ணாம்நூற்றாண்டிலே ஜடாவர்மன் குலசேகரன் கட்டின கோயில்சார்……  கிபி ஆயிரத்து நூத்து தொண்ணூறு முதல் ஆயிரத்து எரநூத்து பதினேளு வரைக்கும் மதுரையை ஆண்ட ஜடாவர்மன் குலசேகரன் தென்பாண்டிய நாட்டிலே கட்டின கோயில்கள் மொத்தம் ஏழு. இது அதிலே ரெண்டாவது…அதுக்குப்பின்னாடி திருமலைநாயக்கரோட தம்பி ரங்கப்பநாயக்கன் இதுக்கு ராயகோபுரம் எளுப்பி மகாமண்டபம் கட்டி சுத்துமதிலும் கட்டினார்…” என்றான்.

கிருஷ்ணன் அவர்கள் புதுத் தம்பதிகளா இருக்கும் என எண்ணிக்கொண்டான்.  இளைஞன் கிருஷ்ணன் அருகே வந்துகொண்டு ”என் பேரு ராஜு சார்.. நமக்கு இந்த கோயில்தான் எல்லாமே…நமக்கு தெரியாம இங்க ஒண்ணுமில்ல..” என்றான்.

கிருஷ்ணன் அதிர்ந்து அனிச்சையாக பக்கத்துச் சிலையின் கால்களை பற்றிக்கொண்டான். அந்த இளைஞனுக்கு கண்கள் தெரியாது என அப்போதுதான் தெரிந்தது. அவனுடைய இமைகளுக்குள் இரு சிறிய சோழிகள் போல கலங்கிய வெள்விழிகள் அலைந்தன. ஆனால் மிக இயல்பாக நடந்தபடி ”இங்க உள்ள சிற்பங்களெல்லாம் நாயக்கர்பாணி சிற்பங்களோட சரியான உதாரணம்னு படிச்சவங்க சொல்றாங்க. ஹிண்டு பத்திரிகையிலேகூட நல்ல போட்டோல்லாம் வந்திருக்கு சார்” என்றான்

”உனக்கு கண் தெரியாதா?” என்றான் கிருஷ்ணன். அவன் சிரித்தபடி ”இப்பதானா கண்டுபிடிச்சீங்க? தெரியாது சார் ” கிருஷ்ணன் அவன் முகத்தைப் பார்ப்பதைத் தவிர்த்தான். பார்வையிலாது ஏதோ விசித்திர வண்டு போல துள்ளிய வெள்விழி தொந்தரவு செய்தது. கையில் சாமரத்துடன் நின்ற பெண்சிலையைப் பார்த்தபடி ”பிறவிலேயே தெரியாதா?” என்றான். ”பாக்கிறதுன்னாலே என்னான்னு தெரியாது சார்”

கிருஷ்ணனுக்கு சொற்கள் நழுவி நழுவிச் சென்றன. ”…அது யாரு?” என்றான். அதன்பின்னர்தான் ஏன் அந்தக்கேள்வி என்று அவன் மனம் வியந்தது ”ஊட்டுக்காரி சார்…இங்கதான் அவளும். அவங்கம்மா மார்க்கட்டுலே பூ கட்டிக்கிட்டிருந்தா…நான் பொறந்து வளந்தது எல்லாமே இங்கதான்…எங்கம்மா இங்கதான் பிச்சை எடுத்தா… அவங்கம்மா போயிட்டாங்க. அதான் கட்டிகிட்டேன்” அவன் கண்களை இழந்தவர்களுக்குரிய அந்த கோணலுடன் மோவாயை தூக்கி மெல்லிய வெட்கத்துடன் சிரித்தான் ”அதாச்சுசார் நாலுவருசம்.. ஒரு பொம்புளைப்புள்ளை இருக்கு…ரெண்டுவயசுலே”

கிருஷ்ணன் திரும்பி அவளைப்பார்த்தான். அவள் மறுபடியும் பூகட்ட ஆரம்பித்திருந்தாள். தொங்கவிடப்பட்ட ஒரு கால் மட்டும் தெரிந்தது. ”மல்லின்னு பேரு சார். நல்ல பொண்ணு…” கிருஷ்ணன் ”குழந்தை எங்க?” என்றான் ”வீட்ல அம்மாகூட இருக்கு சார். அம்மா இப்ப பிச்சைக்கு போறதில்லை. நமக்கு ஏதோ சுமாரா வருது சார்…போரும். வாங்க…”

கிருஷ்ணன் அவனைப்பார்த்தபடி மெல்ல பின்னால் சென்றான். ”சார் இத பாத்தீங்கன்னா தெரியும். குறவன் செலை…தென்பாண்டிய நாட்டிலே நாயக்கர்கள் திருப்பணிசெஞ்ச எல்லா கோயில்களிலேயும் குறவன் குறத்தி செலை இருக்கும். குறவன் ஒரு ராஜகுமாரிய தூக்கிட்டு போறதுமாதிரி இருக்கும். குறத்தி ராஜகுமாரனை தூக்கிட்டு போவா….இதை எதுக்கு வச்சாங்கன்னு நெறைய ஆராய்ச்சிகள் இருக்கு சார். சும்மா அழகுக்காக வைக்கலை. அப்டீன்னா எல்லா கோயிலிலேயும் வச்சிருக்க மாட்டாங்க. குறவனைப் பாத்தீங்கன்னா அவன் சாதாரண மலைக்குறவன் மாதிரி இல்லை பாத்தீங்களா? அவன் இடுப்பிலே கட்டியிருக்கிற சல்லடம்கிற ஆபரணக் கச்சைய பாருங்க…என்ன ஒரு வேலைப்பாடு. சின்ன மணிகளை கோத்து கட்டியிருக்கிற மாதிரி இருக்கு. அந்த மணிகளை கோத்திருக்கிற கயித்த பாருங்க சார் மூணுபிரிக் கயிற முறுக்கினதுமாதிரி இருக்குல்ல…அதான்சார் நாயக்கர்காலத்து சிற்பக்கலை….”

கிருஷ்ணன் அத்தனை நுட்பமாக சிலைகளை பார்த்ததில்லை. அவன் விரல்களால் தடவிப்பார்த்தான் ”சார் இதுக்கே மலைச்சிராதீங்க, இடுப்பிலே தொங்கவிட்டிருக்கான் பாருங்க உடுக்கு, அதுலே இழுத்துக்கட்டியிருக்கிற கயித்துலகூட மூணுபிரி முறுக்கு இருக்கு பாருங்க…குறவனோட கையிலே இருக்கிற குத்துவாளைப்பாருங்க சார். எவ்ளவு வேலைப்பாடு. அதோட பிடியிலே வைரங்கள் பதிச்சிருக்கிற மாதிரி செதுக்கியிருக்காங்க சார். அவனோட இடுப்பிலே கச்சமா கட்டியிருக்கிற வேட்டியோட நெளிவைப்பாத்தா அந்த துணி அவ்ளோ ஒசத்தீன்னு தெரியுதுல்ல சார்?  கழுத்திலே அர்த்தசந்திர ஹாரம் போட்டிருக்கான் சார். அதிலே பதக்கங்கள் வரிசையா தொங்குது…ஆமா சார், அவன் குறவனில்லை. குறவ ராஜா. அவன் தலைப்பாகைய பாருங்க. என்ன ஒரு கம்பீரமா கட்டியிருக்கான்னு…”

கிருஷ்ணன் குறவனையே பார்த்துக்கொண்டு நின்றான். சில கணங்கள் கூர்து நோக்கினால் அப்படியே உயிருடன் வந்து நிற்கும் சிற்பம் அது. ”…இதுலே என்ன விசேஷம்னாக்க சார், தெய்வரூபங்களைச் செதுக்கிறப்ப பொதுவா எலும்புகள் தெரியிற மாதிரி செதுக்க மாட்டாங்க. ஆனா இந்தச் செலையிலே விலாவெலும்புகள் எவ்ளவு வரிவரியா தெரியுது பாத்தீங்களா? குறவன் ரொம்ப மெலிஞ்சு ஆனா உறுதியான உடம்போட இருக்கான் சார். அந்தக்காலத்திலே குறவராஜாக்களுக்கு பாண்டிய குலத்துலே களவுமணம் பண்றதுக்கு என்னமோ ஒரு உரிமை இருந்திருக்கு…” குறவனின் தோளில் சிறிய உருவமாக இளவரசி வெயிலுக்கு தன் முந்தானையை விரித்துப்பிடித்து அமர்ந்திருந்தாள்.

குறவனின் கண்கள் விரிந்து எருமைவிழிகள் போல விழித்தன ”…குறவனோட பார்வைய பாத்தீங்களா சார்?” என்றான் ராஜு ” உருட்டி மிரட்டுற மாதிரி பாக்கிறான். இதுக்கு சாஸ்திரத்திலே மகிஷ நயனம்னு பேரு..ஆனா அவன் நின்னுட்டிருக்கிறத பாத்தீங்களா, ஒரு காலை முன்னாடி வச்சு மத்த காலை பின்னுக்கு வச்சு மெல்ல குனிஞ்சு பதுங்கிறாப்ல நிக்கிறான்…இதுக்கு வியாஹ்ர பாவம்னு பேருசார்.. அதாவது புலிப்பதுங்கல்னு அர்த்தம்”

”இதெல்லாம் யாரு சொல்லித்தந்தாங்க?” என்றான் கிருஷ்ணன். ராஜு ”இங்க முன்னாடி அய்யங்காருசாமி ஒருத்தரு வருவாரு.. நார்ணசாமி ஆச்சாரியாருனு சொல்வாங்க. பெரியபடிப்பு படிச்சவரு… டேய் இந்தாடான்னு தினமும் எதாவது திங்கக்குடுப்பாரு.. அவரு சொல்லிகேட்டதுதான் சார். பாவம் பெரிய மனுஷன். போனவருஷம் தவறிட்டாரு ” என்றான் ”இந்தப்பக்கம் நிக்கிறவ குறத்தி… பதினொரு அடி எட்டிஞ்சு உசரம்சார்…”

குறத்தியின் கனத்த கொண்டை தோளில் சரிந்திருந்தது. ஆண்மை ததும்பும் பெண்ணுடல். திடமான பெருமுலைகள். குடக்கழுத்து இடுப்பு. பிடிவாதமும் கர்வமும் தெரியும் முகபாவனை. இடுப்பில் நார்ப்பெட்டி பனைநாரால் முடையபப்ட்டதுபோலவே பின்னல் தெரிய இருந்தது.”குறத்தி புள்ள பெத்த நடுவயசுக்காரி சார். அடிவயித்தப்பாருங்க… அலையலையா பிரசவவரி தெரியுது பாத்தீங்களா…கிட்டக்க போயி பாருங்க. அப்பதான் தெரியும்… முலைகள பாத்தா கன்னி கணக்கா இருக்கா. அது அவ எப்டிப்பட்ட ராஜச ரூபம்னு காட்டுதுசார்..இளவரசனைப்பாத்தீங்கன்னா சின்னப்பையனை மாதிரி இருக்கான். அம்மாதோளிலே இருக்கிற மாதிரி ஜாலியா இருக்கான் பாத்தீங்களா…சிரிப்பைப் பாருங்க…”

கிருஷ்ணன் குறத்தி சிலையை நன்றாகப் பார்க்க பின்னால் நகர்ந்தான். ”வழக்கமா பொண்ணுகளுக்கு முலை ஒண்ணு ஒசிஞ்சு ஒண்ணு வெலகி இருந்தாத்தான் சார் யதார்த்தமா இருக்கும். ஆனா சாமுத்ரிகா லட்சணப்படி சிலையச்செஞ்சா அப்டி செதுக்க முடியாது. சமமா பொண்ணு  நின்னாக்க அதுல அழகு இல்ல. அந்தால வெளக்குநாச்சி செலைகள பாருங்க பொம்மைகணக்காத்தான் இருக்கும். அதுக்குத்தான் இப்டி செஞ்சிருக்கான். இதுக்கு சந்த்யாபத்ம நிலைன்னு பேருசார். அந்தியிலே தாமரைப்பூவு இதழ்மூடி கொஞ்சம் வாடி குழைஞ்சு நிக்கிறாப்ல நிக்கிறா பாத்தீங்களா? அப்டி வளைஞ்சு நின்னா ஒருமுலை முன்னால வந்து இன்னொண்ணு ஒசிஞ்சுடுது பாத்தீங்களா? அதான் அழகு..ஆனா இவ கன்னி இல்ல. அதான் முலைக்காம்பை இவ்ளவு பெரிசா செதுக்கியிருக்கான்….”

”இதெல்லாம் உனக்கு ஆச்சாரியார் பாத்து சொன்னாரா?” என்றான் கிருஷ்ணன் சிரித்தபடி. ”சீச்சீ அவரு பெரிய மனுஷர் சார்… இதெல்லாம் நானே பாத்து தெரிஞ்சுகிட்டதுதான்”

”பாத்தா?” என்றான் கிருஷ்ணன். ராஜு சிரித்தபடி ”என்ன சார், பாத்துன்னா தொட்டுப்பாத்துதான். நான் வளாந்ததே இந்த கோயிலிலேதான். இங்க நான் ஒரு நூறுவாட்டியாவது தொடாத ஒத்தக் கல்லு கெடையாது. இந்தச்செலையை எல்லாம் ராத்திரிமுச்சூடும் தொட்டு தொட்டுபாத்திருக்கேன் சார். ஓரு ஆயிரம் பத்தாயிரம் வாட்டி. ஒரு கீறல் விழுந்தாகூட சொல்லிருவேன்…”

கிருஷ்ணன் ராஜுவின் முகத்தையே பார்த்தான். கண்ணுக்குப் பழகி அந்த முகத்தில் முதலில் தெரிந்த வெறுமை இல்லாமலாகிவிட்டிருந்தது.
”இதான் சார் அகோர வீரபத்ரன்… அந்தப்பக்கம் அக்னி வீரபத்ரன். நேர் எதிரிலே ஊர்த்துவ வீரபத்ரன்….மூணுபேருமே கொடூரமான கொலைசெய்ற நெலையிலே நிக்கிறாங்க. பதினாறு கையிலேயும் ஆயுதங்கள். கட்கம்,கதை, மழு,சாபம்… ஆனா இது நெஜமான கொலைவெறித்தாண்டவம் கெடையாது சார். பாருங்க ஒரு டேன்ஸ் மாதிரித்தானே இருக்கு… ஒரு நிருத்யம்சார் இது..பீபத்ஸத்தையும் வீரத்தையும் எல்லாம் வெறும் ரஸமா மாத்தியிருக்கான்…”

அவனுக்கு அந்தச்சிலைகளைப்பற்றி தெரிந்தவற்றை பலநூறு பக்கங்கள் கொண்ட ஒருநூலாக எழுதிவிடலாமென தோன்றியது. கிருஷ்ணன் அந்த ஐயங்காரை நினைத்துக் கொண்டான். மூளை நிறைய சிற்பசாஸ்திர ஞானத்துடன் குடும்பத்தாலும் ஊராலும் உதாசீனப்படுத்தப்பட்டு இந்த கோயிலில் வந்து அமர்ந்திருப்பார் போல. கோயிலில் அலைந்த பிச்சைக்காரக்குழந்தையில் அனைத்தையும் ஏற்றிவிட்டு சென்றிருக்கிறார். ஆனால் ஒருவகையில் தகுதியான சீடனுக்குத்தான் வித்தையை கொடுத்திருக்கிறார்.

”இது ரதி அந்தப்பக்கம் மன்மதன் சார்…தென்பாண்டிநாட்டுக் கோயில்களிலே எல்லாம் ரதிமன்மதன் சிலை இருக்கும். ஒருகாலத்திலே தாந்த்ரீகர்கள் தனி கடவுள்களா இவங்களை கும்பிட்டிருக்காங்க. அதனாலத்தான் இப்டி செதுக்கி வைச்சிருக்காங்க…இந்த கோயிலிலேயே அழகான செலைகள்னா இந்த ரதியும் மன்மதனும்தான் சார்…பெண்ணழகோட உச்சம்னா ரதி. ஆணாழகோட உச்சம் மன்மதன். பாருங்கசார், ரதி என்ன ஒயிலா அன்னப்பறவை மேலே அமர்ந்திருக்கான்னு. அவ உடம்பிலே எத்தனை நகையிருக்கு தெரியுமா? கழுத்திலே  ஆரம் மட்டுமே பதினெட்டு போட்டிருக்கா சார். கைவளையும் கடகமும் தோள் வளையும் எல்லாம் உண்டு…நம்ம சாஸ்திரத்திலே சொல்லியிருக்கிற எல்லா நகையும் போட்டிருக்கா…ஆனா அவ உடம்பு நகையால மறையல பாருங்க…அவ உடலழகு நகைகளால ஜாஸ்திதான் ஆகுது…மார்பைப்பாத்தீங்கன்னா நகைகள்லாம் முலைவளைவிலே சரியா வளைஞ்சு வர்ரதினாலே அவளோட அழகான முலைகளோட வடிவம் மறையல..”

ராஜு அவள் கால்களை தொட்டுக் காட்டினான் ”நகங்களைப் பாருங்க சார், பளபளன்னு சிப்பி கணக்கா இருக்கு. புலியோட கண்ணுமாதிரி சுதட்சிணையோட நகம் இருந்ததுன்னுட்டு காளிதாசன் சொல்றான் சார். அந்தமாதிரி நகம்…மின்னுது சார்…ஏன் நகத்தைப்போயி இப்டி செதுக்கியிருக்கான்? சார், நீங்க பாத்தீங்கனா எப்பேற்பட்ட அழகிக்கும் கால்நகம்தான் சார் அழுக்கா இருக்கும். உடம்பிலே ஒரு சத்து குறைஞ்சாக்கூட நகத்திலே தெரிஞ்சிரும். நகம் இப்டி இருந்தா அவளுக்கு அழகு பரிபூரணம்னு அர்த்தம்… கொஞ்சம் தள்ளி நின்னு பாருங்க… ”

ராஜு மறுபக்கம் போனான் ”இது மன்மதன்.நம்ம செலைகளிலே மீசை வச்ச செலைகள் கம்மி. மன்மதன் அதிலே ஒருத்தன். உடம்புலே எப்டி ஒரு திமிரு பாத்தீங்களா? நல்ல திமிலு குலுக்கி வார பொலிகாளை மாதிரி இருக்கான்…காலை முன்னால தூக்கி வச்சிருக்கான். அதுல ஆசை தெரியுது பாத்தீங்களா? என்னிக்குமே ஆம்பிளதான்சார் முதல் ஸ்டெப் வைக்கணும்… நல்லா பாருங்கசார், மன்மதன் பார்வை ரதிமேலே. ஆனா ரதி அவனைப்பாக்கலை. அவ கண்ணு வெட்கி கீழே சரிஞ்சிருக்கு… மன்மதனோட இடது கையிலே கரும்புவில்லு. வலதுகையிலே முல்லைமலரம்பு…அந்த அம்பை அவன் கட்டைவிரலையும் சுட்டுவிரலையும் சேத்து பிடிச்சிருக்கிற விதத்தைப் பாருங்க…எவ்ளவு மெல்லிசா பிடிச்சிருக்கான்…பூவைபிடிக்கிறதுன்னா அப்டித்தான் சார் பிடிக்கணும்…பூ கசங்கப்படாது…”ராஜு புன்னகையுடன் ”…அவன்  கையோட நேரா கண்ணை வச்சு பாருங்க சார்… ரதியோட முலைக்காம்பு தெரியும்…”

ஆமாம். கிருஷ்ணன் வியந்து நின்றுவிட்டான். ”அவன் கை சூட்சுமமா அந்த நுனியைத்தான் சார் பிடிச்சிருக்கு. முல்லை அரும்பை பிடிக்கிற மாதிரி அதை பிடிக்கணும்னு சொல்றதுசார் இந்தச் செலை” கிருஷ்ணன் மன்மதனின் கண்களைப் பார்த்தான். அவற்றில் அடங்காபெருங்காமம் ஒரு மென்சிரிப்பாக ஒளிவிட்டது. ‘காமம்’  என்று உச்சரிப்பதுபோல் உறைந்த கல் உதடுகள்.

”மாமா”என்று அவள் குரல் கேட்டு கிருஷ்ணன் திரும்பிப்பார்த்தான். ”என்னம்மா?” என்றான் ராஜு. ”அரும்பு கட்டி தூண்பக்கத்துல வச்சிருக்கேன். போறப்ப எடுத்திட்டு போயிடு. நான் செல்வக்காகூட சந்தைக்குபோயிட்டு வந்திடுறேன்”. அவள் ஏன் காதலில் துவளும் கன்னிப்பெண் போல தயங்கி குழறி அதைச் சொல்கிறாள்? அவள் வலக்கை தலைமயிரை தள்ளி  கழுத்தை வருடி இன்னொருகையில் பிளாஸ்டிக் வளையை உருட்டியது. உடல் மெல்லக்குழைந்தது.

கிருஷ்ணன் திரும்பி ராஜுவைப் பார்த்தான். அவன் புன்னகையுடன் முகவாயைத்தூக்கி ”நான் பாத்துக்கறேன்மா…போய்ட்டு பத்ரமா வா” என்றான். அவள் கண்கள் ஒருகணம் கூட எங்கும் விலகவில்லை என்பதை கிருஷ்ணன் கவனித்தான். அவள்  அவனைமட்டுமே பார்த்துக்கொண்டிருந்தாள். ஏதோ மேலும் சொல்ல வருவது போல அரைக்கணம் தயங்கிவிட்டு திரும்பிச் சென்றாள்.

”மன்மதன் கிட்ட எந்த ஆயுதமும் கெடையாது சார்…அந்தக் கரும்புவில்லும் மலரம்பும் மட்டும்தான்… இதோ அவன் காலிலே பாத்தீங்கன்னா..” ராஜு தொட்டுக்காட்டி சொல்ல ஆரம்பித்தான்.
***
http://www.jeyamohan.in/?p=5810

அலை அறிந்தது - [சிறுகதை]

-ஜெயமோகன் 





தெற்குப்பக்கம் சாலைச்சரிவில் இருந்து ஒரு அலங்காரபெட்டி ஏறிவந்தது. அந்தப்பக்கம் ஓடும் ஆற்றுக்குள் இருந்து நீரில் அது மிதந்து எழுவதுபோல தோன்றியது. அதன்பின் ஒரு தலை. அதன்பின் உடல். நான் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தேன். நெடுநாட்கள் துவைத்து உலர்த்தி பழுப்பேறிய வெள்ளைத்துண்டு நிறத்தில் நரைத்த தலைமுடியும் தாடியும் முழங்கால் வரை சரிந்து காற்றில் ஆடிய நீலநிறமான பெரிய ஜிப்பாச்சட்டையுமாக ஒரு கிழவர் பெட்டியுடன் என்னை நோக்கி வந்தார். வர வர வெற்றிலைக்காவிச்சிரிப்பு துலங்கியபடியே வந்தது. தாடி அசைய கன்னங்கள் உருள என்னைப்பார்த்து சிரித்து ‘’யா ரஹ்மான்… புள்ளே, அம்மை இருக்காஹளா? கூப்பிடுங்க..கூப்பிடுங்கப்பா, ராசால்ல, சுல்தான்ல? ’’ என்றார்
நான் ‘’எனக்கு சீனி முட்டாய் குடுப்பீங்களா?’’ என்றேன். நீளச்சட்டை போட்டபின் சீனிமிட்டாய் விற்கத்தானே வேண்டும்? ‘’அய்யாஅவுஹ தப்பா நினைச்சிட்டீஹகளே…நாம சீனி முட்டாயி விக்யலே. அத்தர் பன்னீர் செண்டு விக்கறோம்…அம்மைய கூப்பிடுங்க’’ என்றார். நான் மூக்குக்குள் கையை விட்டுக்கொண்டு யோசித்தேன். அவர் ஏழடி உயரம் இருந்தார். பெரிய மூக்கு பெரிய கண்கள் பெரிய கைகால்கள். நல்ல சிவப்பு நிறம். பெட்டிக்குள் இருந்து எடுத்த பழைய பட்டுமாதிரி ஒரு வழவழப்பு அவர் நெற்றியிலும் கன்னங்களிலும் இருந்தது.
அவர் தன் அலங்காரபெட்டியை தரையில் வைத்தார். அது விசித்திரமான பெட்டி. மரத்தாலான பெட்டிதான். அதன் மூடிமட்டும் வளைவாக மேலெழுந்திருந்தது. பெட்டியின் மரப்பரப்பின்மீது பட்டுப்புடவையை வெட்டி ஒட்டியிருந்தார்கள். எங்கள் வீட்டிலேயே உள்ளே அதைப்போல ஒன்று இருந்தது. அதற்கு முருக்குபெட்டி என்று அம்மா பெயர் சொன்னாள். மென்மையான முருக்கு மரத்தால்செய்யபப்ட்டது. எடை இருக்காது. வெளியே பட்டுப்புடவையும் உள்ளே வெல்வெட்துணியும் ஒட்டப்பட்டு பளபளவென இருக்கும். அதற்குள்தான் ராமாயணம் மகாபாரதம் ஜாதகங்கள் எல்லாம் இருந்தன. இந்தப்பெட்டி மீது பட்டுப்புடவை நன்றாக நரைத்திருந்தது. ஆங்காங்கே கிழிந்து உள்ளிருந்து மரம் தெரிந்தது
அவர் பெட்டியை திறந்தார். உள்ளே நான் எதிர்பார்த்தது போலவே சிவந்த வெல்வெட். சிவப்புநிறம் எனக்கு எப்போதுமே தின்பண்ட ஆசையை உருவாக்கிவிடும். என் மார்பில் எச்சில் குழாயாக வழிய ஆரம்பித்தது. வெல்வெட்டால் ஆன மூடியை விலக்கியதும் உள்ளே சிறிய அறைகளில் ஏராளமான சின்னச்சின்ன புட்டிகள். சிவப்பு, நீலம், பச்சை, மஞ்சள்…ஒவ்வொன்றும் பெரிய சீனி மிட்டாய் போல ஒளிவிட்டது. அவர் சிவப்புநிற சீசாவை எடுத்து திறந்து ஒரு சொட்டு தன் சுட்டுவிரலில் எடுத்து என் வயிற்றில் தடவினார். எனக்கு ஜில்லிட்டது. வயிற்றை உக்கி சிரித்தேன்
‘புள்ள போயி அம்மைக்கிட்ட சொல்லணும்… ஒரு அத்தர் பாய் வந்திருக்காருன்னு சொல்லணும்…அத்தர் கபீர்னு சொல்லணும்…’’
நான் தயக்கமாக உள்ளே சென்றேன். நான் உள்ளே செல்லும் கணங்களுக்குள் அவர் அப்படியே மாயமாக காற்றில் மறைந்துவிடுவார் என்று தோன்றியது. பின்னால் திரும்பிப் பார்த்துக்கொண்டே சென்றேன். உள்ளே சென்றதும்தான் என்னுடன் ஒரு விசித்திர மணமும் வருவதைக் கண்டேன். ரோஜாமலரின் மணம். ஆனால் வெறும் ரோஜாமணம் அல்ல. சங்கரி அக்காவுடன் நான் ஈஸ்வரியக்கா கல்யாணத்தன்று சேர்ந்து படுத்துக்கொண்டபோது அவள் கூந்தலில் இருந்து வந்த அதே மணம்.
கொல்லையில் குந்தி பானையைச் சாம்பலால் தேய்த்துக்கொண்டிருந்த அம்மா என்னைப்பார்த்ததும் ‘’என்ன மறுபடியும் பசிக்க ஆரம்பிச்சிட்டுதாக்கும்…எல்லாம் எந்த பாதாளத்திலே போகுதுண்ணே தெரியலையே’’என்றவள் மூக்கு விடைக்க சட்டென்று ‘’அத்தர்பாய் வந்திருக்காரா?’’என்று எழுந்து கையை வேட்டியிலேயே துடைத்தபின் முடியை கோதியபடி வேகமாக முன்வாசலுக்குச் சென்றாள். நான் பின்னால் ஓடினேன்.
‘’வாங்க பாய்… ’’ என்றபடி அம்மா முன்பக்கம் வந்தபின் அவரைக் கண்டு நின்று ‘’புது ஆளா?’’ என்றாள்.
‘’ஆமா, நாச்சியாரே….நம்மள் பேரு கபீர். காதர்பாயி போனமாசம் நெஞ்சடைச்சு மௌத்தாயிட்டான்..’’ என்றபின் ‘’அத்தர் பன்னீர் செண்டு பாருங்க நாச்சியே…அசல் அரேபியா செண்டு பேர்சியா அத்தர்…’’என்றார்.
அம்மா சிரித்தபடி ‘’காயப்பட்டிணம் பன்னீரு..அதையும் சொல்லவேண்டியதுதானே’’ என்று அமர்ந்தாள். ஒவ்வொரு புட்டியாக எடுத்து முகர்ந்து பார்த்தாள்.
‘’புள்ளைக்கு என்ன வயசாகுது?’’என்றார் கபீர் பாய்.
அம்மா ’’அது ஆகுது மூணு வயசு…மாந்தையன் மாதிரி எப்ப பாத்தாலும் முழிச்சிட்டு இருக்கான்…பேச்சும் சரியா வரல்லை… இது என்னது?’’ என்றாள்.
‘’நாச்சியே அது மல்லிகைசெண்டுல்லா….யாஸ்மின் செண்டு..அசல் சிங்கப்பூரு மேக்கு..’’என்றபின் ’’சின்ன எஜமான் எளுத்துவாசனை உள்ளவராக்கும்… பாத்துட்டே இருங்க’’என்றார்.
‘’என்னத்த வாசனையோ…மீன் மணத்த கேட்டா எங்க இருந்தாலும் பாய்ஞ்சு வந்திருவான்’’என்றாள் அம்மா.
‘’கண்ணைப்பாத்தா தெரியுதே…கர்ப்பூரக்கட்டியாக்கும். நாம பேசுறது செய்றது எல்லாம் அப்டியே உள்ள போகுது…அல்லாகிருபை உள்ள பிள்ளைங்கள கண்ணப்பாத்தா தெரியும் பாத்துக்கிடுங்க’’ கபீர் பாய் சொன்னார் ‘’அய்யய்ய, சீசாவ அப்டியே கவுத்துப்பாத்தாக்க நான் எங்க போயி ஏவாரம் பாக்குறது…நாச்சியாரே…இது எடுங்க…தாழம்பூவு’’
‘’தாழம்பூவு இங்கியே பூத்து கெடக்கே… பாரிஜாதம் உண்டா?’’
‘’கல்யாண சௌகந்திகம் இருக்குல்லா, பண்டு மகாபாரதத்திலே பீமன் தேடிட்டு போனது, அது கொண்டாண்ணு கேப்பீஹ போலுக்கே…யா ரஹ்மான்..இத்தா மணம் இருக்கிற ஒண்ணும் உங்களுக்கு போதிக்கலையாக்கும்….’’
‘’பட்டுசாரியிலே போட்டு வைக்கிறதுக்கில்லா..’’என்றபின் அம்மா இரு புட்டிகளை எடுத்தார். ‘’சாயபுக்கு காயப்பட்டிணமா?’’
‘’ஆமா…அம்பதடி அந்தால நிண்ணாலே தெரியுமே…நாங்கள்லாம் அசல் அரேபியா மரைக்காயரு நாச்சியே…ஊட்டாளுக்கு என்ன சோலி?’’
‘’ரெயிஸ்ட்ரார் ஆபீஸிலே’’ என்றாள் அம்மா. ‘’இங்க நாகருகோவிலிலே வீடா? எம்பிடு பிள்ளைய?’’
‘’அது கெடக்கு ஏழெட்டு..ரெண்டெண்ணத்த கெட்டிக்குடுத்தாச்சு…இன்னும் அறை நிறைச்சு நிக்குது நாலெண்ணம்… எடலாக்குடி பாலத்துக்கு பக்கத்திலே வீடு…’’
‘’இருக்கிறதுல மூத்தவ பேரென்ன?’’ என்றாள் அம்மா இன்னொரு புட்டியை எடுத்தபின் ‘’அத வச்சுகிடுறேன்…இது வேண்டாம்’’
‘’ரெண்டும் இருக்கட்டும் நாச்சியே…மூத்தவ பேரு கதீஜா. இப்ப வயசு இருபத்தஞ்சாவது… தரம் பாக்கணும்.கையிலே ஓட்டமில்லே… என்னண்ணு தரம் பாக்க?’’
‘’ இருபத்தஞ்சு தானே…எனக்கே இருபத்தாறிலேதான் தரம் வந்தது…ஒரு ஜாக்கெட்டு துணி இருக்கு கதிஜாவுக்கு குடுக்கவா? எனக்கு பாறசாலை அக்கா குடுத்தது. நான் இனிமே நிறமுள்ள துணி போடுறதில்லை…’’ அம்மா சிரித்தபடி ‘’அதுக்கு வெலை இல்லை பாய்.. அது சும்மா…’’ என்றாள்
‘’அது நமக்கு தெரியாதா… நாச்சிக்கு இனிமே வெள்ளைதானோ…மலையாளத்திலே மட்டும் எப்பமும் வெள்ளை’’ என்றார் கபீர்பாய். ‘’தமிழ்நாட்டுப்பக்கம் சுமங்கலிப்பொண்டுக வெள்ளைய கட்டமாட்டாக’’
‘’வெள்ளைதானே ஐஸரியம்?’’என்றபின் அம்மா உள்ளே சென்று ஜாக்கெட் துணியை எடுத்துக்கொண்டு வந்து கொடுத்தாள். ‘’சீக்கிரமே கல்யாணமாயிடும்னு நான் சொன்னதாச் சொல்லுங்க பாய்’’ என்றபின் ‘’நான் அந்த செண்ட வச்சிட்டு இத எடுக்கவா?” என்றாள்
‘’எல்லாம் நாச்சியாரு அனுக்கிரகமாக்குமே..’’ என்றபின் அவர் பெட்டியை மூடினார். ‘’இனிமே பொட்டிய திறந்து வைக்யப்பிடாது நாச்சியே… மாத்திகிட்டே இருப்பீஹ..பொட்டப்புத்தியில்லா?’’ திண்ணையில் அமர்ந்தபின் ‘’ஒரு கடுந்தேயிலை போடுங்க நாச்சியே…சீனி நிறைய போடுங்க..’’
‘’நீங்க அரேபியாவிலே இருந்து வந்தீங்களா?’’என்று அம்மா கேட்டாள்.
‘’ஆமா…நாங்கன்னா எங்க பூர்வீகம்…ஒரு முந்நூறு வருஷம் முன்னாடி. எல்லாத்துக்கும் எளுத்து ஆதாரம் இருக்கு. அரேபியாவிலே கெத்தாங்கிற ஊரிலே இருந்து ஒரு கப்பல் உருவிலே நாப்பதுபேரு கெளம்பியிருக்காஹ. அவுஹ வந்து எறங்கின எடம் காயப்பட்டிணம் பக்கம் ஏறுவாடி. கப்பலிலே நெறைய சரக்கு கொண்டு வந்தாங்க…’’
‘’என்ன சரக்கு?’’ என்று அம்மா கேட்டாள். புட்டியை முகர்ந்தபின் ‘’அந்த தாழம்பூவே எடுக்கவா?’’ என்றாள்
‘’நாச்சியே மூடின பெட்டிய திறக்கப்பிடாது பாத்துக்கிடுங்க..’’ என்றார் கபீர்பாய். ’’சரக்கு என்னான்னு கேட்டீஹன்னா பேரீச்சம்பழம். அத்தரு. அரபிப்பொன்னு…அதைவச்சுகிட்டு ஒரு பெரிய வங்களாவ கெட்டினாங்க… அப்ப அங்க பெரிய பள்ளிவாசல் கெடையாது. எங்க பெரியவாப்பா அவரு தொழுறதுக்குன்னு ஒரு கல்லுபள்ளி கெட்டினாரு… அதை இப்பவும் பூனைக்கண்ணு மரக்காயர் பள்ளின்னுதான் சொல்றாக’’
‘’அவருக்கு பூனைக்கண்னா?’’
‘’நல்லா கேட்டீஹ…நம்ம நாலு பொட்டைக்குட்டிஹளுக்கும் பூனைக்கண்ணுதான் நாச்சியே…அதொரு அரேபிய அழகுல்லா’’
அம்மா உள்ளே சென்று கொஞ்சநேரத்தில் கருப்பு டீயுடன் வந்தாள்.
நான் ’’எனக்கு கருப்பட்டி?’’ என்றேன்
‘’இந்த லெச்சணம்தான் பாயி எப்பவும். திங்கிறதுல்லாம வேற நினைப்பே இல்லை’’ என்றாள் அம்மா
‘’இப்ப தீயி நாக்கிலே இருக்கு. இனி அந்த தீ கல்பிலே கேறும்..அப்பம் தம்பி வேற எங்கியோ போயிடுவாருல்ல…இன்ஷா அல்லா’’ கபீர் பாய் டீயை ஊதி ஊதி குடித்தபோது மீசை நுனி பறந்ததை நான் கவனித்தேன்.
‘’உங்க கொள்ளுத்தாத்தா வேவாரமா பண்ணினாரு?’’
‘’ஆமா…கப்பலு ஏவாரம். அரேபியாவுக்கும் கொளும்புக்கும்… எட்டு ஊரே அவரு சோத்தத்தான் திண்ணுதுன்னு சொல்லுவாஹ.எங்க வாப்பா சின்னப்பிள்ளையா இருக்கிறப்ப பிளீமத் காரிலேதான் உஸ்கூல் போவாருண்ணு ஊரிலே பேச்சு உண்டு… பொண்ணுக நிக்காஹெல்லாம் திண்ணவேலி தேர்த்திருவிழா மாதிரில்லா நடத்தினாரு அவங்க வாப்பா.. அவரு காலத்திலேதான் பொன்னுக்கும் பொருளுக்கும் அளவே இல்லாம போச்சு…எட்டு கப்பல் வச்சு ஏவாரம் பண்ணினாரு…செவத்த மரைக்காயர்னா ஊரிலே பேரச்சொன்னாலே எந்திரிச்சு நின்னு போடுவானுஹள்லா?’’
அம்மா வாய்மேல் கையை வைத்தாள். ‘’பிறவு?’’
‘’ரம்ஸான் சக்காத்துக்கு மட்டும் அந்தக்காலத்திலே அம்பதாயிரம், லெச்சம் ரூவா வரை செலவாக்குவாரு….நாலாயிரம் அஞ்சாயிரம் பேருக்கு பிரியாணி… பணகுடிப்பொட்டலிலே இருந்து ஆட்டுமந்தைகள அப்டியே பட்டாளம் மாதிரி ஓட்டிட்டு வந்திருவாஹ. ராத்திரி முச்சூடும் சமையல். பிரியாணி மணம் அந்தால நாங்குனேரிக்கு அடிக்கும்லா? அவரு வங்களா நாலுமாடி. முற்றம் பள்ளிவாசல் மைதானத்தை விட பெரிசு… நாலாம்மாடி உப்பரிக்கையிலே நிண்ணுட்டு ரூவாநோட்டா அள்ளி அள்ளி வீசிட்டே இருப்பாரு..கீழே ஏழைப்பாழைங்க வந்து ராத்திரிலேயே காத்து கிடப்பாங்க. ரூபாவ அவுஹ பாய்ஞ்சு அள்ளி அள்ளி சேப்பாங்க… அந்தக்காலத்திலே அந்த ரம்சான் சக்காத்த வச்சுத்தான் எட்டு ஊரிலே சனங்க துணிமணி எடுக்கிறதுன்னா பாத்துக்கிடுங்க’’
‘’பகவானே’’என்றாள் அம்மா
‘’எல்லாம் அல்லாவோட வெளையாட்டு… கொதிச்ச பாலிலே தண்ணி விளுந்தமாதரி எல்லாம் அப்டியே போய்ட்டுது.. . முப்பது வருசத்திலே வீடு வாசல் எல்லாம் போயிட்டுது… கொளும்பு ஏவாரத்திலே பெரும் நஷ்டம்… யுத்தம் வந்தப்ப எல்லாம் போச்சு… அப்டியே எங்கள கூட்டிகிட்டு அப்பா பணகுடிக்கு வந்தாரு…அங்கேருந்து இங்க எடலாக்குடி…நம்ம பொளைப்பெல்லாம் இங்கதான்…ஆனாலும் அப்பப்ப ஏறுவாடி போயி நம்ம வாப்பா வங்களாவையும் பள்ளிவாசலையும் பாத்துட்டு வந்துடறது…. அல்லாவை பாக்க முடியலேண்ணாலும் அல்லாவோட அடையாளங்கள பாக்குறது ஞானமாக்குமே… மொத்தம் பதினெட்டு ரூவா நாச்சியே’’
‘’அய்யோ..பதினெட்டு ரூவாயா…எனக்கு வேண்டாம்..இந்தா பாயி நீங்களே வச்சுக்க்குங்க’’
‘’இது என்னா பேச்சு? வாங்கின மொதல திருப்பி எடுக்கவா…செரி பதினாறு..ரெண்டு ரூவா நஷ்டம் அல்லா கணக்கிலே’’
‘’பதிமூணுண்ணா எடுப்பேன்..இல்லேன்னா இந்தா இருக்கு’’
‘’என்ன நாச்சியே..ஏவாரி வயித்துலே அடிக்கலாமா? செரி போட்டு..பதினஞ்சு ஒரு பைசா உங்கிளுக்கும் இல்ல எனக்கும் இல்ல’’
அம்மா ‘’பதிநாலு’’என்றாள்
‘’புட்டிய குடுங்க நாச்சியே…நான் நாலூடு போயி பொழைக்கிற ஆளு’’
‘’செரி பதினஞ்சு’’ என்றாள் அம்மா.
உள்ளிருந்து அம்மா பணம் எடுத்து வரும்போது கபீர் பாய் என்னிடம் ‘’எல்லாம் ரிக்கார்டு பண்ணியாச்சா? உள்ள போட்டா புடிச்சு வைச்சாச்சா?’’என்றார்.
நான் ‘’எனக்கு சீனி முட்டாய்?’’என்றேன்
அம்மா பணத்தைக் கொடுத்துவிட்டு ‘’கதைய கேட்டா கஷ்டமா இருக்கு பாய்…லட்சுமி போறதும் வாறதும் பெருமாளுக்கே தெரியாதுண்ணு சொல்லுவாங்க’’
‘’அதிலே ஒரு ரகசியமும் இல்ல நாச்சியே… அலை மேலேறினா கீழிறங்கணும்னு அல்லாவோட ஆணை..அதை மனுஷன் மாத்த முடியுமா? கீழ எறங்குத நேரத்திலே நாம வந்து பொறந்தாச்சு… வரட்டுமா?’’ என்றபடி பெட்டியை மூடி தலைமேல் ஏற்றினார்.
‘’இருந்தாலும் ஒரு காரணம் இருக்கணும்லா? தப்பு நம்மகிட்டதானே இருக்கணும்..ஆண்டவன் தப்பு செய்வானா?’’
‘’காசு வந்தா அதுக்குண்டான தப்புகள செய்யாம இருப்போமா…அதானே மனுஷ கொணம்…’’
‘’என்ன தப்பு? உங்க அப்பாதாத்தாக்க அம்பிடு தானதர்மம் பண்ணியிருக்காங்க’’
‘’நாச்சியே, சக்காத்த வாரி எறிஞ்சு குடுத்த பாவத்துக்கு இன்னும் எத்தன தலமொற கஷ்டப்படணுமோ , ஆருகண்டா…? யா ரஹ்மான்’’ என்று நிமிர்ந்து ‘’வாறேன் நாச்சியே…வாறேன் புள்ளை’’என்று சென்றார். அலங்காரப்பெட்டி காற்றின் அலையில் செல்வதுபோல சென்றது.
நான் அம்மாவிடம் ’’எனக்கு கருப்பட்டி?’’ என்றேன்
[சதக்கத்துல்லா ஹசனீ ஆசிரியத்துவத்தில் வந்த ’அல்-ஹிந்த்’ ரம்சான் மலரில் [2010 ] வெளியான கதை]

Friday, July 1, 2011

இரு கலைஞர்கள் - சிறுகதை

-ஜெயமோகன்




ஜெ.கருணாகர் காலையில் தூங்கி எழ தாமதமாகும். இரவு வெகுநேரம்வரை , சிலநாட்களில் விடிகாலை நான்குமணிவரைக்கூட, அவரது ‘மன்ற’த்தில் பேச்சு நீள்வதுண்டு. மாடிமீது தாழ்வாகக் கட்டப்பட்ட கூரைப்பந்தல் அது. நீளவாட்டில் பெஞ்சுகள் நடுவே நீளமான மேஜை. எல்லாம் காயமும் கறையும் பட்ட பழைய உருப்படிகள். வலதுபக்கம் முனையில் தன் நாற்காலியில் அவர் பின்மதியம் மூன்று மூன்றரை வாக்கில் வந்து அமர்வார். சாதாரணமாக லுங்கி கட்டிக் கொண்டு மேலே சட்டையில்லாமல் நீளமான வெண்தலைமயிர் சிலும்பிப் பறக்க தூங்கிக் களைத்த கண்களுடன் வந்து அமர்வதும் உண்டு.குளிர்ந்த நீரில் குளித்து தலைசீவி மடிப்பு கலையாத ஜிப்பாவும் காற்சட்டையுமாக வருவதும் உண்டு. எல்லாம் அவரது மனநிலையைப் பொறுத்ததே ஒழிய வருபவர்களின் தகுதியைச் சார்ந்தது அல்ல. அவரது மன்றத்தில் எப்போதும் கிடைக்கும் கஞ்சாப்புகைக்காக வந்து அமரும் குடிசைவாசிகள் முதல் அவரது நீண்ட தன்னுரையாடல்களையும் ஊடாகக் பொழியும் வசைகளையும் நக்கல்களையும் கேட்பதற்கென்றே வரும் ரசிகர்கள் வரை அங்கே எப்போதும் ஆளிருக்கும். பலசமயம் அவருக்காக சிலும்பியும் இலைப்பொட்டலங்களும் ஆட்களும் காத்திருப்பார்கள். அபூர்வமாக அவர் மட்டும் வந்து தன்னந்தனிமையில் தன்மீசையை ஆழ்ந்து கோதியபடி கூரையை வெறித்து அமர்ந்திருப்பார். மன்றம் நெரியநெரிய ஆள் நிரம்பி சமகாலப்பிரச்சினைகள் மிக உக்கிரமாக விவாதிக்கப்படும்போதும்கூட சட்டென்று அவர் தன் முழுத்தனிமைக்குள் சென்றுவிடுவதுண்டு. அவரை நெருங்கியறிந்தவர்கள் அவர் மிகமிகத் தனிமையான மனிதர் என்பதை அறிவார்கள். அது தினம் ஆயிரம்பேர் புழங்கும் பேராலயத்தில் கருவறை இருளில் நிற்கும் மூலச்சிலையின் தனிமை. அங்கே வருபவர்கள்கூட அத்தனிமையால் ஈர்க்கப்பட்டவர்கள் போலும். அவரது நெருக்கமான நண்பரும் வாசகருமான கெ.எஸ்.ராவ் ஒருமுறை கூறியதுபோல அவர் தன் வாழ்நாள் முழுக்க எப்போதும் பிறரிடம் பேசியதேயில்லை, எழுதியதுமில்லை.
அன்றுகாலை வழக்கத்துக்கு முற்றிலும் மாறாக அவர் அதிகாலையிலேயே எழுந்து தூக்கத்தில் நடப்பவர் போல நடந்து கொட்டகைக்கு வந்து கைகளால் இருட்டில் தடவி முட்டைவிளக்கைப் போட்டுவிட்டு தன் நாற்காலியில் அமர்ந்து தன் எண்ணங்களுள் ஆழ்ந்தவராக மீசையைக் கோதிவிட்டுக் கொண்டு எதிரே நேற்று வந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் விட்டுச்சென்ற சிவப்புத் துண்டை வெறித்து நோக்கியபடி அமர்ந்திருந்தார். எப்போதோ தன் இருப்பை உணர்ந்து பெருமூச்சுடன் அசைந்து அமர்ந்து சுற்றிலும் நோக்கியபோது இரவில் ரீங்காரத்தைக் கேட்டார். அவர் இருந்த பகுதி நகரில் நடுவே குடிசைகளால் சூழப்பட்ட தெரு. எங்கோ ஒரு குழந்தை அழுதது. ஆட்டோ ஒன்று அசிங்கமான ஒலியுடன் சென்றது. மிகத்தொலைவில் ஒருசில நாய்கள் குரைத்துக் கொண்டன. எல்லா ஒலிகளையும் அந்த சில்வண்டு ஒலி இணைத்துக் கொண்டிருந்தது. இதேபோன்ற நகரிலும் எப்படி சில்வண்டுகள் இரவை நிரப்பிவிடுகின்றன என்று வியப்புடன் எண்ணிக் கொண்டார். எல்லாரும் சிறுவயதில் இரவை சில்வண்டின் ஒலியாகவே அறிகிறார்கள். வெளியே நிரம்பியிருக்கும் இருளையும் வானவிரிவையும் விண்மீன்களையும் கோர்க்கும் நீண்ட ஒலி. சில்வண்டின் ஒலி உடனடியாக இளமைநினைவுகளை உருவாக்கிவிடுகிறது. அம்மாவை, அவள் மென்மையான சருமத்தின் வெம்மையை, புழுக்கவீச்சம் நிறைந்த பாய்தலையணைகளை நினைவுக்குக் கொண்டுவருகிறது. இப்போது உடனே கிளம்பி பஸ் பிடித்து கடலூர் சென்று தன் ஊருக்குப் போய் இறங்கினால் என்ன? என்ன இருக்கும் அங்கே? அவருடைய இளமைக்காலம், அன்றிருந்த மனிதர்கள், மரங்கள் எதுவும் இருக்காது. மண் கூட இருக்காது. மண்மீது காலம் ஒரு சினிமாபோல காட்சிகளை ஓடவிடுகிறது. சென்ற காட்சிகள் மீள்வதேயில்லை.
ஏன் ஒருநாளும் இல்லாத இந்த விழிப்பு, இந்த நிலைகெட்ட எண்ணங்கள் என்று எண்ணிக் கொண்டார். தொண்டையில் ஒரு தவிப்பை உணர்ந்து எழுந்துசென்று மண்கூஜாவிலிருந்து நீரை கண்ணாடி டம்ளரில் விட்டு குடித்தார். அதன் பயணம் குளுமையாக இதமாக இருந்தது. ஏன்? சிலும்பி மேஜைமீதுதான் கிடந்தது. ஒரு முறை புகைபோடலாம்தான். ஆனால் அப்போது சலிப்பாக இருந்தது. புகைபோட்டு பிந்தித் தூங்கிய ஒருநாளும் அவர் விழித்துக் கொண்டதில்லை. இப்போது ஏன்? அவருக்கு விழிக்கும்போது கண்ட கனவு நினைவுக்கு வந்தது. ஆனால் கனவல்ல அது. ஒரு நினைவுபோல அது ஓடியது. கடுமையான நெஞ்சுவலி. கூவுகிறார் , யாருக்குமே அது கேட்கவில்லை. எல்லாரும் அவரைச்சுற்றித்தான் இருந்தார்கள். நடமாடிக் கொண்டிருந்தார்கள். ஆனால் யாருமே அவரைக் கேட்கவில்லை, காணவும் இல்லை. அவர்களைப் பொறுத்தவரை ஏற்கனவே அவர் இல்லாமலாகிவிட்டிருந்தார். விழித்துக் கொண்டதும் பெருமூச்சுடன் இருண்ட வீட்டில் ஜன்னல்வழியாக வந்த தெருவிளக்கின் ஒளி பரவிக் கிடந்த கூரைப்பரப்பை பார்த்தபடி கிடந்தார். பிறகு தூக்கம் வரவில்லை.
புன்னகைத்துக் கொண்டு மீசையைத் தடவினார். நேற்று கெ.எஸ் மூத்த தோழர் ஒருவரின் மரணத்தைப்பற்றிச் சொன்னார். மாரடைப்பு. வயலுக்குப் போனவர் வரப்பில் இறந்துகிடந்தார். நாற்பதுவருடம் முன்பு சிலவருடங்கள் அவருடன் நெருக்கமாக இருந்திருக்கிறார். சேர்ந்தே தலைமறைவாக மதுரை, சின்னமனூர் பக்கம் சுற்றியிருக்கிறார்கள். அதிகம் படிக்காவிட்டாலும் உண்மையான நம்பிக்கை கொண்டிருந்த கம்யூனிஸ்ட் அவர்.
”கம்யூனிஸ்டுகள்லாம் சாகவேண்டிய நேரம் எப்பவோ வந்தாச்சுய்யா… இந்தாள் எதுக்கு அவசியமில்லாம இவ்ளவுநாள் லேட் பண்ணினான்? காடு வா வாங்குது கட்சி போ போங்குது.. ” என்று நக்கலாகச்சிரித்து அதைத் தாண்டிவந்தார். ஆனால் உள்ளே தூண்டில்முள் தொடுத்தியிருக்கிறது. அத்தனை பயமா? யாரைப்பற்றி அல்லது எதைப்பற்றி? தன் மரணம். எல்லா உயிருக்கும் தன் மரணம் பெரிது. எழுத்தாளனுக்கு இன்னும் பெரிது. மரணபயமில்லாதவன் ஏற்கனவே இல்லாமலாகிவிட்டவன். இல்லாமலாகிவிட்ட ஒருவன் எப்படி இருப்பான். அவனைக் காண்பவர்கள் என்ன உணர்வார்கள்? என்ன சிந்தனை இது? நான் ஒரு பொருள்முதல்வாதி அல்லவா? சிரித்தபடி ‘ இல்லை நான் ஒரு சுயமுதல்வாதி ‘ என்று முனகிக் கொண்டார்.

கீழே ஒரு காரின் ஹார்ன் ஒலி கேட்டது. பலமுறை கேட்டபின்னரே அது தன் வீட்டை உத்தேசித்தது என்று கருணாகர் உணர்ந்தார். எழுந்து நோக்கியபோது வெள்ளைஉடையணிந்த ஒருவர் நீளமான பெரிய காரிலிருந்து இறங்கி கேட்டருகே நிற்பதும் காரின் முகவிளக்குகள் சுடர்வதும் தெரிந்தது. படிகளில் தடுமாறி இறங்கி வீட்டுக்குமுன் வந்தார். அதற்குள் அவர் மனைவி எழுந்து விளக்கைப் போட்டு கதவைத்திறந்து வெளிவாசலைத் தாழ்நீக்கி திறந்துவிட்டாள்.

அது யுவராஜ். நரை கலந்த பத்துநாள் முடிபரவிய மொட்டைத்தலை, முகவாய். உருண்டையான கரிய முகம். வெண்ணிற ஜிப்பா , வேட்டி. நாற்பதுவருடம் முன்பு முதல்முதலாக தேனியில் கட்சிக்கூட்டத்தில் தன் சகோதரர்களுடன் பாடவந்திருந்து அறிமுகமாகும்போது முதலில் மனதைக் கவர்ந்த அதே அழகிய குழந்தைக் கண்கள், குழந்தையின் சிரிப்பு. கையில் ஒரு பிளாஸ்டிக் பை.
”வாய்யா…என்ன அதிகாலையிலேயே… ” என்றார். ” ஆச்சரியமா இருக்கே”
“நீங்க காலையிலேயே எந்திரிச்சிருக்கிறதுதான் ஆச்சரியம் ஜெ.கெ” என்றபடி யுவராஜ் உள்ளே வந்தார்.
“என்னமோ முழிப்பு வந்தது… உள்ள வா.. ”
யுவராஜ் உள்ளே வந்து அமர்ந்தார். அவரது வருகையால் வீடே மெல்லிய பரபரப்பு கொண்டது. ஊரிலிருந்து வந்திருந்த அவரது பெண்ணும் மகனும் எழுந்துவந்து வணக்கம் சொன்னார்கள். யுவராஜ் அவர்களிடம் நலம் விசாரித்தார். காபி டீ எதுவுமே குடிப்பதில்லை என்றார்.
“இப்ப அவன் ஆச்சாரிய ஸ்வாமிகள் மாதிரி. பழங்கள்தான் குடுக்கணும். அதில ஒண்ணை எடுத்து ஆசீர்வாதம் பண்ணி நமக்கு பிரசாதமா எறிஞ்சு குடுப்பான். ஏன்யா? ” என்றார் கருணாகர். ”அதிகாலையிலேயே குளிச்சிருக்கே. கிட்டத்தட்ட ஞானி ஆயிட்டே…”
யுவராஜ் அவரது கிண்டல்களை பொருட்படுத்தவேயில்லை. ” கெளம்புங்க ஜெகெ. நாம ஒரு எடத்துக்குப் போறோம். ”
“எங்கய்யா? ”
“பக்கம்தான். உடனே போய்ட்டு வந்திருவோம். ”
“இப்பவேயா?நான் பல்லுகூட தேக்கலை”
” தேச்சு குளிச்ச்சிட்டு வாங்க… நான் காத்திருக்கேன்..”
“குளிக்கிறதா, நல்ல கதை. நான் மத்தியான்னம்தான் குளிக்கிறது. இப்டியே வரதுன்னா வரேன்”
“இல்லை ஜெகெ. குளிச்சிட்டுதான் போகணும்.எனக்காக வாங்க…”
” என்னய்யா… ஆசிரமம் கீசிரமம் கட்ட ஏதாவது எடம் பாத்திருக்கியா? சினிமாப்பாட்டு போடறதையெல்லாம் விட்டுரப்போறியா. பாவம்யா நம்ம ஊர் விரகதாபக் காதலர்கள்… கைவிட்டுராதே …”
“சொல்றேன். போய்ட்டு வாங்க ஜெகெ” யுவராஜ் தன் கையிலிருந்த பொட்டலத்தை நீட்டினார். ” குளிச்சுட்டு இதைப் போட்டுட்டு வாங்க”
”என்னய்யா விளையாடறியா? ” கருணாகர் அதை உருவினார். வெள்ளை வேட்டியும் ஜிப்பாவும். ” காவியைக் கீவியை கொண்டாந்துட்டியோன்னு பயந்துட்டேன் .நல்லவேளை”
”சீக்கிரம் ஜெகெ”
கருணாகர் காரில் பின்னிருக்கையில் ஏறி அமர்ந்ததும் அருகே யுவராஜ் ஏறிக் கொண்டார். கார் கிளம்பியது.
“என்ன பாட்டு போடணும் ஜெகெ ? ” என்றார் யுவராஜ்.
” ஏதாவது போடு. நான் பாட்டு கேட்டே ரொம்ப நாளாச்சு”
“ஹிந்துஸ்தானி போடறேனே ” என்றபடி யுவராஜ் குண்டேச்சா சகோதரர்களின் குறுந்தகடை எடுத்து டிரைவரிடம் கொடுத்தார். மெல்லிய ஒலியில் ஆழமான குரல்கள் காருக்குள் நிறைந்தன. வெளியில் அலைகிளம்பும் சுத்த ஆலாபனை.
யுவராஜ் கருணாகர் ஏதாவது கேட்பார் என்று எதிர்பார்த்தவர் போல திரும்பிப் பார்த்தார். ஆனால் அவர் சாலையோரங்களில் நீலஒளியுடன் விடியல் விரிவதை பார்க்க ஆரம்பித்துவிட்டிருந்தார். கைகள் மீசையில் ஓடிக்கொண்டிருந்தன.

இசை நிற்கும்போது மட்டும் கருணாகர் அசைந்து எழுந்து பெருமூச்சுவிட்டார். அவரது மனநிலைக்கு ஏற்ப குறுந்தகடுகளை தேர்வுசெய்து யுவராஜ் போட்டுக் கொண்டிருந்தார்.
கார் திருவண்ணாமலைக்குள் நுழையும்போதாவது கருணாகர் ஏதாவது கேட்பார் என்று யுவராஜ் எதிர்பார்த்தார். கருணாகர் சற்று நிமிர்ந்து அமர்ந்து மலையை வெறித்த கண்களுடன் நோக்கினார். கார் ரமண ஆசிரமம் நோக்கிச்சென்றது. சிமிட்டி முகப்பைத் தாண்டியதுமே அவரது காரை ஆசிரமவாசிகள் அடையாளம் கண்டுகொண்டார்கள். பலர் முகப்புக்கு வந்து எட்டிப்பார்த்தார்கள். அப்போது அதிக பயணிகள் இல்லை. இருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் வட இந்தியர்கள். அவர்களுக்கு இருவரையுமே அடையாளம் தெரியவில்லை.

இறங்கி மீசையை வருடியபடி மரக்கிளைமீது இருந்த மயில்களை நோக்கி நின்ற கருணாகரிடம் யுவராஜ் ” இதுக்கு முன்னாடி வந்திருக்கீங்களா?” என்றார்.
” ம்” என்றார் கருணாகர்
யுவராஜ் ஆர்வத்துடன் ” எப்ப?” என்றார்
கருணாகர் திரும்பாமலேயே ” ரொம்ப முன்னாடி ” என்றார்.
ஆசிரமப் பொறுப்பாளர் ஓடிவந்தார். ” வாங்க ராஜா சார். வாங்க…” என்றார். அவருக்கு கருணாகரை அடையாளம் தெரியவில்லை. அவருக்கும் ஒரு வணக்கம் போட்டார்.
யுவராஜ் ,” இது ஜெ.கருணாகர். பெரிய எழுத்தாளர்” என்றார்
ஆசிரமப் பொறுப்பாளருக்கு எழுத்தாளர் என்பதும் சரிவரப் பிடி கிடைக்கவில்லை. ” அப்டீங்களா? வாங்க…”
யுவராஜ் கிளர்ச்சி அடைந்திருந்தார். கைகளில் இருந்த பூஜைப்பொருட்களை அடிக்கடி மாற்றி மாற்றி பிடித்தார். ஆசிரம ஆட்கள் அவரைச் சுற்றி பணிவும் பிரியமும் கலந்து பேசிக்கொண்டிருப்பதில் அவர் மனம் செல்லவில்லை. படிகளில் ஏறி உள்ளே சென்றார். கருணாகர் மீசையை வருடியபடி ஆழ்ந்த மௌனத்துடன் பார்த்தபடி நடந்தார். அவர் ஏதாவது சொல்வார் என்று யுவராஜ் எதிர்பார்த்தார். அவரையே ஓரக்கண்ணால் பார்த்தார்.
இருவரும் ரமணரின் அறைக்குள் மௌனமாகவே நுழைந்தனர். காலையின் குளிர் அங்கே மிச்சமிருந்தது. ரமணர் படத்தில் கோவணத்துடன் கையில் பெரிய தண்டம் ஏந்தி புலித்தோல்மீது அமர்ந்திருந்தார்.
யுவராஜ் ” உக்காரலாமா?” என்றார்.
கருணாகர் ஒன்றும் பேசாமல் அமர்ந்துகொண்டார். யுவராஜ் சற்றுதள்ளி தரையில் அமர்ந்தார். ஹாலில் இருந்த சிலர் எழுந்துவிலகினர். கதவருகே சிலர் நின்று வேடிக்கை பார்த்தனர்.
யுவராஜ் ரமணரின் படத்தையே கூர்ந்து நோக்கிக்கொண்டிருந்தார். அவரது தலை சற்று ஆட ஆரம்பித்தது. தலையைக் குனித்து கைகளை புத்தகம் போல விரித்து பார்த்தார். மீண்டும் தலைதூக்கி உதட்டைக்கடித்தபடி ரமணரைப் பார்த்தார். ஒருமுறை குரலைச் செருமிக் கொண்டார்.
அவரது செருமல் ஒலியில் கருணாகர் திடுக்கிட்டுவிழித்து அவரை நோக்கி புன்னகையுடன் மீசையை வருடினார்.
யுவராஜ் மெல்ல முனகினார். சுத்த தன்யாஸி. பிறகு ”ஹிமகிரி தனயே ஹேமலதே” என்று குரல் எழுந்தது. சற்றே சுருதிவிலகியதும், அதனாலேயே நாட்டுப்புறப்பாடல்களுக்குரிய உண்மையின் வசீகரம் கலந்ததுமான குரல். பிறகு ”அகிலாண்டேஸ்வரீ ” பிறகு ” ஸ்ரீசக்ரராஜசிம்மனேஸ்வரி ” . பாடப்பாட அவர் குரல் கனிந்து வந்தது. ஆரம்பத்தில் அடித்துத் தாளமிட்டுப்பாடியவர் பிறகு மெல்ல விரலால் தொடையில் தொட்டு தாளமிட்டார். ”ஜனனீ ஜனனீ ” பாடியபோது சட்டென்று குரல் கம்மி கரகரத்தது. பாடமுடியாது திணறி விசும்பி கேவினார். சரசரவென கண்ணீர் கொட்ட தோள்கள் குலுங்க அழத்தொடங்கினார்.
கருணாகர் யுவராஜ் அழுவதையே எவ்வித உணர்ச்சியும் இல்லாமல் பார்த்து அமர்ந்திருந்தார். வாசலில் கூடிய ஆட்கள் முகத்தில் வியப்புடனும் சிரிப்புடனும் வேடிக்கைபார்த்தனர். ஒரு முதிய வெள்ளைக்காரமாது இடுப்பில் கைவைத்து நின்று முகச்சுருக்கங்கள் நெளிய நோக்கினாள். யுவராஜ் மேலும் மேலும் அழுகைவலுத்து ஒரு கட்டத்தில் கேவிக்கேவி அழுதுகொண்டே தரையில் படுத்துவிட்டார். அப்படியே தேம்பல்களாகி மெல்ல அடங்கி அமைதியாக வெறுந்தரையில் குழந்தைபோலக் கிடந்தார்.
ஆசிரமத்து முதியவர் ஒருவர் வந்து மெல்ல அவர் தோள்களைத் தொட்டு ” ராஜா சார் ” என்று அழைத்தார். யுவராஜ் விழித்து எழுந்து ஒன்றும்புரியாதவர் போல அவரையும் ரமணரின் படத்தையும் பார்த்தார். நீண்டபெருமூச்சுடன் கண்களையும் கன்னங்களையும் துடைத்தார். எழுந்து தன் ஜிப்பாவை இழுத்து விட்டுக் கொண்டார். அவர் முகம் தெளிந்திருந்தது. ரமணரைப் பார்த்தபோது அவர் முகத்தில் மெல்லிய இளநகை கூடியது.
”வாங்கோ” என்றார் முதியவர் புன்னகையுடன். ” இதே இடத்திலே உக்காந்துதான் பால் பிரண்டன் அழுதார். ஜூலியன் ஹக்ஸ்லி அழுதார். உலகம் முழுக்க இருந்து எத்தனையோபேர் இங்கவந்து இப்டி அழுதிருக்கா….”
சட்டென்று நினைவுகூர்ந்த யுவராஜ் ” ஜெகெ சார் எங்கே? ”என்றார்.
கிழவர் திரும்பி ” தோ இருக்காரே” என்றார்
கருணாகர் தன் கண்கள் ரமணரில் ஊன்றியிருக்க விரைப்புடன் அமர்ந்திருந்தார். ரமணரை அவர் முறைப்பதுபோலிருந்தது
“ஜெகெ !”
கருணாகர் விழித்தார். அவசரமாக எழுந்தபடி ” முடிச்சிட்டியா?” என்றார் ”போலாமா? பசிக்குது”
“போலாம்”
இருவரும் விடைபெற்று படியிறங்கி காரை நோக்கி நடந்தனர். கருணாகர் மீண்டும் மயில்களையும் மரங்களையும் நோக்கியபடி மீசையை முறுக்கினார்.
காரில் ஏறி சாலைக்கு வந்தனர். கருணாகர் சாலையில் சென்ற ஆட்களை பார்த்தபடி ” அப்பல்லாம் இந்த ஊரிலே ஏகப்பட்ட தொழுநோயாளிகள் இருப்பாங்க” என்றார்.
யுவராஜ் ஒன்றும் சொல்லவில்லை. அவர் திரும்பி விலகும் ரமணாசிரமத்தையும் , ஆசிரமத்தை மடியிலமர்த்திய மலையையும் நோக்கிக் கொண்டிருந்தார்.
கார் நகர்மையம் சென்றதும் டிரைவரை அனுப்பி பழங்கள் வாங்கிவரச்சொல்லி காரிலமர்ந்தபடியே உண்டார்கள். கருணாகர் சற்று அமைதியிழந்திருப்பதை யுவராஜ் கண்டார்.
கார் மீண்டும் கிளம்பியதும் யுவராஜ் பாட்டு போடப்போனார் ” வேண்டாம்” என்றார் கருணாகர் .
திருவண்ணாமலை தாண்டியதும் கருணாகர் பெருமூச்சுடன் சரிந்து அமர்ந்தார். கிண்டலாக சிரித்தபடி ” என்னய்யா அப்டி ஒரு அழுகை?” என்றார்.
“தெரியலை அண்ணே…அழணும்னு தோணிச்சு அவ்ளவுதான்… ”
” யோகக்காரன்யா நீ ” என்றார் கருணாகர். ”என்னால அப்டி அழமுடியல”
அந்தக்குரல் யுவராஜை ஆச்சரியப்படவைத்தது. பரபரப்புடன் திரும்பி ” ஏன் ஜெகெ?” என்றார்.
கருணாகரின் கண்கள் காற்றுபட்ட கங்குபோல சீறியணைந்தன ” கள்ளமோ கரைந்தழும் . அதான் ” என்றார்.
யுவராஜ் முகம் மாறியது. குரல் தாழ ” ஏண்ணே அப்டி சொல்லிட்டீங்க? ” என்றார்.
“ஏன்னா அது அப்டித்தான்”
“எங்கிட்ட அப்டி என்ன அண்ணே கள்ளத்தைக் கண்டீங்க? சொல்லுங்க”
“என்னமோ சொன்னேன். விடு”
“இல்லண்ணே…என்னை ஆதிமுதல் தெரிஞ்சவர் நீங்க. சொல்லுங்க ,எந்த அர்த்தத்தில சொன்னீங்க? ”
” ஏதோ சொல்லிட்டேன்யா. போட்டு உசிர வாங்காத ” கருணாகர் சாய்ந்து அமர்ந்து மீசையை அழுத்தமாக முறுக்க ஆரம்பித்தார்.
கண்கள் மெல்ல ஈரமாகி நீர்ப்படலமாகி நிறைய யுவராஜ் அவரையே நோக்கி அமர்ந்திருந்தார்.
கார் நெடுஞ்சாலையில் அசைவின்றி சென்றது. சற்று நேரம் கழித்து கருணாகர் திரும்பிப்பார்த்தபோது யுவராஜின் கன்னங்களில் நீர் வழிந்து தாடிமுட்களில் பரவியிருப்பதைக் கவனித்தார். பொருள்கொள்ளாதவர் போல அதையே பார்த்தார். மீண்டும் திரும்பிக் கொண்டார்.
ஒரு சந்திப்பில் கருணாகர் திரும்பி ” ஒரு எளநி சாப்டலாம்யா” என்றார். கார் நின்றது.
கருணாகர் கதவைத்திறந்து இறங்கினார். ”வாய்யா”
”இல்ல. நீங்க சாப்பிடுங்க”
“என்னய்யா ஆச்சு உனக்கு?”
யுவராஜ் தலைகுனிந்து அமர்ந்திருந்தார். கருணாகர் ஒரு இளநீருக்குச் சொன்னார். அதைக் குடித்து முடித்ததும் ஏறி அமர்ந்துகொண்டார்.
கார் கிளம்பியது. யுவராஜின் உதடுகள் அழுந்தியிருந்தன.
”ஜெகெ” என்றார்
கருணாகர் திரும்பினார்
” என் மேல கொஞ்சமாவது பிரியம் இருந்தா சொல்லுங்க… அப்டி என்ன கள்ளத்தைக் கண்டீங்க?”
கருணாகர் பேசாமலிருந்தார்.
”கள்ளம்னு இருந்தா அது சங்கீதம்மேல நான் கொண்டிருக்கிற ஈடுபாட்டிலதான் இருக்கணும். ஏன்னா அதுதான் நான் . மத்ததெல்லாம் பூச்சுகள்தான். சொல்லுங்க, ஏன் அப்டி சொன்னீங்க? ”
”ஏய் விடுய்யா..போட்டு நோண்டிட்டு”
” எங்கியோ எல்லாம் போகணும்னு ஆசைப்படறேன். எல்லாம் இங்கேருந்துதான் தொடங்கணும். இங்கேயே தப்பு இருக்குன்னா…எனக்கு தெரிஞ்சாகணும் ”
“யோவ், அது பாரதியோட வரி. சும்மா பழக்கதோஷத்தில வாயில வந்திட்டுது. எதையும் உத்தேசிச்சு சொல்லல.”
“உண்மையாவா ? ”
“உண்மையாத்தான்யா. முழுக்க முழுக்க உண்மை. போருமா ?”
யுவராஜ் சற்று முகம் தெளிந்தார். சற்று நேரம்கழித்து அவர் முன் இருக்கை மீது கைவிரல்களால் தாளம்போடுவதை கருணாகர் கண்டார். அதையே அவர் பார்த்துக் கொண்டிருந்தார்
சென்னை புறநகரை நெருங்குவதுவரை பேச்சு ஏதும் நிகழவில்லை. சட்டென்று கருணாகர் ” காலையில நெஞ்சுவலி வாரதுமாதிரி ஒரு கனவு” என்றார்.
யுவராஜ் பதற்றம் அடைந்து ” கனவா? நிஜமாவே வலி ஏதாம் வந்திருக்கப்போகுது ஜெகெ. நாம நேரா இப்டியே நம்ம சௌரிராஜனைப் பார்த்திருவோம்…”
”சும்மா இருய்யா…கனவுதான்…”
“இல்ல.அப்டி விடக்கூடாது. விடிகாலைல வரதுன்னா…”

“அடச் சும்மா இருய்யா.” என்றார் கருணாகர் ” அதான் காலையிலேயே முழிச்சுக்கிட்டேன். இப்ப நல்ல தூக்கம் வருது”

“மேலே போய் ஜமா சேராம பேசாமப் போய் தூங்குங்க”

”பாப்பம்”

”இல்லண்ணா… எதுக்குச் சொல்றேன்னா…”

” நாப்பது வருஷமா பேசி, எழுதி, கேட்டு ஏகப்பட்ட வார்த்தைகள் மூளைக்குள்ள நிரம்பிப்போச்சுய்யா . புகையைப்போட்டா கொசு ஓடுறமாதிரி ஒவ்வொண்ணா ஓடிப்போயிரும். அப்றம் கொஞ்சநேரம் நிம்மதி…. ” கருணாகர் கைகளைதூக்கி சோம்பல் முறித்தார் ” வார்த்தைகளை வச்சிருக்கிறவனால அப்டி சாதாரணமா அழுதிர முடியாது”

கார் கூவியபடி நகருள் நுழைந்தது. கட்டிடங்கள் வெயில் ஒளிரும் சன்னல்களுடன் நெற்றியில் எழுத்துக்களுடன் விலகிச்சென்றன. சுற்றும் சீறும் கூவும் கார்கள். கனத்து சரிந்து செல்லும் பேருந்துகள். நிழல் நீண்ட சந்துகளில் கழட்டப்பட்ட சக்கரங்கள், இரும்புக்குப்பைகள், டீசல் கறைகள், சோர்ந்து வியர்த்த மனிதர்கள்….

அந்த சில்வண்டுகள் இப்போது என்ன செய்யும் ? எங்கே இருக்கின்றன அவை?பிரவுக்காக காத்திருக்கின்றனவா? இந்த மொத்தப் பகலும் அவற்றுக்கு ஒரு வெறும் ரீங்காரம்போலும்….கருணாகர் தலையை உசுப்பி அவ்வெண்ணங்களை உதற முயன்றார்.

வீடுமுன் கார் நின்றபோது ”அப்ப பாப்பம்யா” என்றபடி கருணாகர் இறங்கினார் ” நீ பாட்டுக்கு இறங்கிராதே. அப்றம் தெருவே கூடிரப்போகுது”
யுவராஜ் சங்கடமாகப் புன்னகைத்தார்

சட்டென்று கருணாகர் உரக்கச்சிரித்தார் ” அசடுய்யா நீ. ஒருத்தன் தன்னால அழமுடியலைன்னு சொல்றப்ப ஏன்னு கேக்கலாமா என்ன? ” என்றார் . கதவை சாத்தும் முன் ” ஒரு வேளை அப்டி கேக்கிறவனா நீ இருக்கிறதனாலத்தான் உன்னால அழமுடியுதோ என்னமோ” என்றார்.
அவர் பிடரி பறக்கும் நிமிர்ந்த தலையுடன் மிடுக்காக நடந்து தன் வீட்டுப்படிகளில் ஏறுவதை யுவராஜ் பார்த்தார். புறப்படும்படிச் சொல்ல டிரைவரைத் தொட்டார்.
***

திருமுகப்பில்….. (சிறுகதை)

-ஜெயமோகன்








திருவட்டார் ஆதிகேசவன் கோயிலருகே அன்று ஒரு நல்ல நூலகம் இருந்தது. ஸ்ரீ சித்ரா நூலகம். சித்திரைத்திருநாள் மகாராஜா சொந்த பணத்திலிருந்து கொடுக்கும் நிதியுதவி இருந்தமையால் அங்கே நல்ல நூல்கள் நிறையவே வாங்குவார்கள். நாங்கள் திருவட்டாரிலிருந்து ஒன்றரை கிலோமீட்டர் தள்ளி திருவரம்பில் குடியிருந்தோம். அப்பாவின்அம்மாவும் தங்கையும் திருவட்டாரிலேயே கோயில் அரசமரத்தருகே மூதாதையர் வீட்டிலேயே இருந்தனர். நாங்கள் பரம்பரையாக திருவட்டார் கேசவப்பெருமாள் கோயில் ஊழியர்கள். அந்தக்காலத்தில் யானைக்கொட்டில் பொறுப்பில் இருந்ததாகச் சொல்வார்கள். விடுமுறை நாட்களில் அனேகமாக வாரம் மூன்றுமுறை திருவட்டார் போய் பாட்டியைப்பார்த்து பழங்கதைகள் பேசிவிட்டு நூலகத்திலிருந்து புத்தகம் எடுத்துவருவேன். இதெல்லாம் எழுபதுகளில். நான் அப்போது ஒல்லியான உடலும் பெரிய தலையும் கொண்ட பையன்.
ஒருநாள் அக்குளில் புத்தகங்களுடன், அதில் ஒன்றை வாசித்தபடியே திரும்பி நடந்தபோது ஒரு வாடகைக் கார் கோயில் வாசலில் கதகளிப்புரை முன் அரசமரத்தடியில் வந்து நின்றதைக் கண்டேன். திருவனந்தபுரம் டூரிஸ்டுகள் என்று நினைத்தேன். அன்றெல்லாம் ஆதிகேசவன் கோயிலுக்கு பக்தர்கள் வருவது மிக மிக அபூர்வம். சமீபத்தில் கோயில் தர்மகர்த்தாவும் பூசாரியும் சேர்ந்து ஆதிகேசவனின் நகைகளைக் கொள்ளையடித்தது செய்தியான பிறகுதான் தமிழ் நாட்டு வைணவர்கள் மத்தியில் கோயில் பிரபலமாகி பக்தர் வருகை அதிகரித்தது. ஒரு வைணவக்கோயிலருகே வாழ்ந்த எனக்கு எண்பதுகளில்தான் ஸ்ரீசூர்ணம் நாமம் அணிந்த நெற்றியை பார்க்க வாய்த்தது என்றால் புரிந்துகொள்ளமுடியும்தானே? எங்கள் கோயிலில் சந்தனம்தான் தருவார்கள். குட்டிப்போத்தி வியர்த்துவழிய சந்தனத்தை உரசி உரசி அரைப்பார்.
திருவனந்தபுரம் கார்தான். கரிய அம்பாசிடர். பின் கதவைத்திறந்து ஒரு கன்னங்கரியமனிதர் இறங்கி நின்றார். சோம்பல் முறித்து கைகளை விரித்து இடுப்பை ஒருமாதிரி சுழற்றி எதையோ ஓங்கி வீசுவது போல பாவனைசெய்தார். அவரைப்போன்ற நீளமான மனிதர்கள் அத்தகைய கார்களில் கால்களை மடக்கி வெகுநேரம் அமர்வது கஷ்டம்தான். பார்க்க எங்களூர் சாயலுடன் நல்ல ஆப்ரிக்கச் சாயலும் கலந்தவராகத் தெரிந்தார்.
அரசமரத்தையும் கோயிலின் முகப்பையும் அண்ணாந்து பார்த்தார். கோயிலுக்கு தமிழ்நாட்டுப்பாணி கல்கோபுரம் இல்லை. ஓடுவேய்ந்த உயரமான கேரளபாணி நாலம்பலம்தான். அங்கேபோல நிறைய படிகள். பக்கத்தில் இரட்டை ஆறுகள் ஓடுவதனால் கோயில் அடித்தளத்தை குன்றுபோல உயர்த்திக் கட்டியிருந்தனர்.
அவர் என்னைப்பார்த்து புன்னகைத்து கைகாட்டி அருகே அழைத்த்தார்.
ஆங்கிலத்தில் ” இது ‘டிர்வாட்டர் டெம்பிள்’ தானே ? ” என்றார்.
நான் ”ஆமாம்” என்றேன். ”இதுதான் இந்தப்பகுதியின் முக்கியமான கோயில். ” என்றேன்.
நான் ஆங்கிலம்பேசியது அவருக்கு சற்று வியப்பளித்திருக்கக் கூடும். ” கோயிலுக்குள் நான் போய்ப் பார்க்க முடியுமா?” என்று கேட்டார்
”ஏன் பார்க்கலாமே” என்றேன் புரியாமல் . ” பதினொருமணிக்குத்தான் நடை சாத்துவது…”
”இல்லை என்னை ‘ட்ரிவேன்ட்ரம்’ கோயிலுக்குள் அனுமதிக்கவில்லை”
” ஏன்?’ என்றேன் .
” நான் வெளிநாட்டுக்காரன் ” என்றார். ” நீ போய் கேட்டுவா…பணம் ஏதாவது தேவை என்றால்கூட கொடுத்துவிடலாம்….”
நான் குழப்பத்துடன் கோயிலுக்குள் போய் வாட்ச்மேன் சங்கு அண்ணாவிடம் செய்தியைச் சொன்னேன்.
”அந்தாள் ஹிந்துவாலே? ” என்றார் வெற்றிலையை அதக்கியபடி.
“வெளிநாட்டுக்காரன்…”
” அங்க பாத்தியாலே? ” என்று சுட்டிக்காட்டினார் ‘ அஹிந்துக்களுக்கு ப்ரவேசனமில்லா ‘ என்ற மலையாள பலகை. ” ஹிந்துக்க மட்டும்தாம்ல உள்ளே போவமுடியும்….”
“ஹிந்துக்க இங்கே எங்க வாறாங்க? ”
“நாசமாப் போறானுக…நீ அந்த கறுப்பசாமிட்ட போய்ச் சொல்லுல..போல ”
திரும்பவந்து கரிய மனிதரிடம் செய்தியைச்சொன்னேன். அவர் சற்று யோசித்தார்.
டிரைவர் மலையாள ஆங்கிலத்தில் ” திரும்பிப்போகலாம். நான் சொன்னேன் இல்லையா? . தமிழ்நாட்டிலும் இதேதான் சட்டம்” என்றார். அவர் மீண்டும் காரில் ஏறிக் கொண்டார். முகத்தில் பெரிய அளவில் உணர்ச்சிகள் ஏதும் இல்லை. கார் மீண்டும் ஸ்டார்ட் ஆனது
என்னிடம் அவர் ” உள்ளே இருப்பது என்ன தெய்வம் ? ” என்றார்
“ஆதி கேசவன். ” என்றேன்
“விஷ்ணுவா ? படுத்திருக்கும் கடவுள் ? ”
“ஆமாம். மல்லாந்து படுத்திருக்கிறார். பெரிய சிலை. ” நான் கைகளை விரித்து சொல்ல முயன்று சரியாக விளக்க ஆங்கில அறிவு கைகொடுக்காததனால் சிறிது தூரம் ஓடி நீளத்தை தரையில் வரைந்து காட்டி ” பெரிய சிலை..ரொம்ப நீளம்..” என்றேன்.
“கறுப்பா?”
“ரொம்ப”
”நிறையபேர் சொன்னார்கள் ”என்றார் அவர் ”பார்க்க மிகவும் ஆசைப்பட்டேன். திருவனந்தபுரத்தில் அனுமதிக்க மாட்டேன் என்று சொன்னார்கள். இங்கே சிலசமயம் வாய்ப்பு கிடைக்கும் என்றார்கள். அதனால்தான் வந்தேன். பரவாயில்லை ” என்று பெருமூச்சுவிட்டார்.
”உங்கள்பேர் என்ன ? எந்த ஊர்?” என்றேன் மிகth தாமதமாக, கார் அதற்குள் நகர ஆரம்பித்திருந்தது.
”என்னைத்தெரியாதா? ” என்று அவர் ஆச்சரியத்துடன் கேட்டார்.
“இல்லையே. ஏன்” என்றேன் ஆச்சரியத்துடன்.
அவர் டிரைவரை பார்த்தார். பிறகு ”என் பெயர் காளிச்சரண்.” என்றார். சொன்னபின் என் முகத்தை கூர்ந்து பார்த்தார்.
”அப்படியா ?” என்றேன் சாதாரணமாக. ” வெளிநாட்டுக்காரர் என்றீர்கள் ? வெளிநாட்டுக்காரர்கள் எல்லாம் கிறிஸ்தவர்கள்தானே? ”
“நான் வெஸ்ட் இண்டீஸிலிருந்து வருகிறேன் . நீ என் படத்தைப் பார்த்ததே இல்லையா? ”
”இல்லை” என் மூளை மின்னியது. ” உங்கள் பாஸ்போர்ட்டைத்தாருங்கள் ” என்று கேட்டு வாங்கிப்போய் அண்ணாவிடம் காட்டினேன்.
”அத எதுக்குடே நான் பாக்கணும்…? பர்மிசன் இல்லைண்ணாக்க இல்ல. நான்தான்ல இங்க ராஜா. நம்பி இல்ல. அவரு மூலஸ்தானத்துக்கு ராஜா… நான் கோபுரவாசலுக்கு ராஜா… ”
”அண்ணா, இவர் மேற்கு இந்தியாக்காரராக்கும்… . ஹிந்துதான். பேரைப்பாருங்க ”
அண்ணா எழுத்தெழுத்தாகப் படித்தார். ஆமாம் காளி சரணேதான். ” ஹிந்துண்ணாக்க வந்து பெருமாளை சேவிக்கலாம். தப்பில்லை. ஆனால் காளிபக்தனுங்க எல்லாம் ஏன் பெருமாள் கோயிலுக்குவரணும் ? கொல்லங்கோட்டுக்கோ கூட்டாலுமூட்டுக்கோ போய் ஒழியவேண்டியதுதானே ? ” குரல் மாற, ” காசுதருவானாலே? ” என்றார்
“காசுபற்றி கவலையே இல்லைன்றான்”
”செரி அப்ப அவன உள்ளவிடு மக்கா..நம்பி கேட்டா நான் சொல்லுகேன் ” என்றார் அண்ணா.
நான் மூச்சுவாங்க ஓடிவந்து அவரிடம் அனுமதி கிடைத்துவிட்டது என்று சொன்னேன். காளிச்சரண் பரவசமடைந்து விட்டார். ”சட்டை போடக்கூடாது இல்லை? செருப்பையும் கழற்றவேண்டும் இல்லையா ? ”
“தொப்பியும் போடக்கூடாது”
“சரி சரி”
சட்டையைக் கழற்றியபோது அவர் உடல் அலங்காரமண்டபத்தில் நிற்கும் கன்னங்கரிய வீரபத்ரர் சிலைகளைப்போன்றே இருந்தது.
படிகளை வேகமாக ஏறினார். நான் பின்னால் ஓடினேன். உள்ளே போய் பயபக்தியுடன் கோயிலை ஏறிட்டுப்பார்த்தார்.
“இது என்ன?”
“அகல்விளக்குகள். திரி போட்டு தீபம் ஏற்றுவோம். ”
“எப்போது”
“வைகுண்ட ஏகாதசிக்கு.. அன்றைக்குதான் சொற்கவாசல் திறக்கும் ”
பிராகாரம் வழியாக சுற்றிப் பார்த்தார். பலநூறு தீபபாலிகை சிலைகளில் ஒவ்வொரு சிலைக்கும் ஒவ்வொரு கூந்தல் அலங்காரம் செய்யப்பட்டிருப்பதை நான் காட்டினேன். ”ஆச்சரியம்தான்” என்றார்
” நகைகள் கூட …. ஒருநகை மீண்டும் வராது…”
“அப்படியா?”
ரிஷி ஒருவரின் ஆண்குறியை அவரே வாயில்வைத்திருக்கும் காட்சியை காளிச்சரண் பார்க்கக்கூடாது என விழைந்து நான் முன்னால் சென்றேன். அவர் வேறு மனநிலையில் இருந்தார்.
அலங்கார மண்டபத்தில் கண்விழித்து நடனநிலையில் ஓங்கி நின்ற கரிய சிலைகள் முன் மெய்மறந்து நின்றார் அவர் . நான் உற்சாகமாக ” இது வீரபத்ரன். இது பிட்சாடனர். இது கோபால கிருஷ்ணன். குழலூதுவதைப்பார்த்தீர்களா? பசு இல்லை. ஆனால் இருப்பதுபோல பாவனை…இது ரதி.. எதிரே இதுதான் மன்மதன்…” என்று எனக்குத்தெரிந்தவரை விளக்கினேன்
” கடவுளே என்ன ஒரு கருமை ! ” என்று வியந்தார். ” கரியசாயம் அடித்திருக்கிறார்களா?”என்று தடவிப்பார்த்தார்.
“கருங்கல்சிலை. அதுதான்” என்றேன் ” இதுதான் ரதி. தேவலோகத்திலேயே இவள்தான் அழகு ! நகத்தைப் பார்த்தீர்களா? ”
“என்ன ஒரு கருமை…” என்றார்.
” உள்ளே பெருமாள் இதைவிட கருமை. நல்ல மைநிறம். ”
”உள்ளே போகலாமா? ”
” அதுதான் போகச்சொல்லிவிட்டார்களே . அது சங்கு அண்ணா. எனக்கு அவர் அண்ணாதான். சொந்தத்தில் ”
“இந்தக் கோயில் எத்தனைவருடம் பழமை உடையது?”
“இதை நம்மாழ்வார் பாடியிருக்கிறார்”
“யார் அவர்?”
“நம்மாழ்வார். ரொம்பப் பழைய காலம். ஐந்தாம் நூற்றாண்டு… ”
“அப்படியென்றால் ?”
”ஆயிரத்து ஐந்நூறு வருடம் முன்பு…”
அவர் நின்று என்னை நோக்கினார். ” இதற்கு ஆதாரம் இருக்கிறதா? ”
” நிறைய புத்தகங்கள் இருக்கின்றன. உண்மையில் அதற்கு முன்பே இந்தக் கோயில் இருக்கிறது… ரொம்பச் சின்ன கோயிலாக இருந்திருக்கிறது. ஓலைக்கூரை போட்டிருந்தார்களாம். அதற்கு முன்னால் கூரையே இல்லாமல்….. ”
அதற்குள் மாதவன்நாயர் நொண்டிக்கால்களுடன் விரைந்துவந்தார். காளிச்சரணைப் பார்த்ததும் என்னிடம் ” அமெரிக்காக்காரன்னு சொன்னப்ப வெள்ளைக்காரனா இருப்பான்னு நினைச்சேன்…இவன்கிட்ட பணமிருக்காடே ? ” என்றார். நான் அவர் வரவை விரும்பாததை முகத்தில் காட்டினேன்.
”துரை, இதாக்கும் ஆதிகேசவப்பெருமாள் கோயில். திருவிதாங்கூர் ராஜாக்களுக்க குலதெய்வம் இதுதான். திருவனந்தபுரம்கோயிலுக்கு இதுதான் ஒரிஜினல் பாத்துக்கிடுங்க. ” என்றபடி பின்னால் வந்தார்
”அவருக்கு தமிழ் தெரியாது” என்றேன் கடுப்புடன்
”நீ இங்க்லீஷ்லே சொல்லுடே , எளவு, மெட்றிக் பாஸ் ஆனவன் தானே? ”
”என்ன சொல்கிறார்?”
நான் அதை குத்துமதிப்பாக ஆங்கிலத்தில் சொன்னேன். அவர் அப்படியா என தலையை ஆட்டினார்
“துரை, கேட்டேளா, இங்கேயுள்ள மூர்த்தி மலந்து கைவிரிச்சு படுத்திருக்கு. இதுக்கு சாஸ்திரத்திலே மகாயோக நிலைண்ணாக்கும் பேரு…. மகாயோகநிலைண்ணாக்க வேற ஒண்ணுமே இல்லாத பெருநிலைண்ணு அர்த்தம் கேட்டுக்கிடுங்க. அப்ப தெய்வங்கள் பொறக்கேல்ல. பிரபஞ்சமும் பொறக்கல்ல. காலம்கூட உண்டாகல்லண்ணாக்க வேற என்ன? விஷ்ணுமட்டும்தான் இருந்தாரு. வேறு ஒண்ணுமே இல்ல ”
நான் சொல்லிமுடிக்க நேரமாயிற்று. அவர் என்னையே கூர்ந்து நோக்கி நின்றது எனக்கு சஞ்சலம் அளிக்கவே கண்களை திருப்பிக் கொண்டேன்.
” பாஷை இல்ல. சித்தம் இல்ல. சித்தத்துக்கு அப்பால் உள்ள துரியம் இல்ல. துரியாதீதமும் இல்ல. விஷ்ணுஇல்லாம வேற ஒண்ணுமே இல்ல. அப்படிண்ணாக்க விஷ்ணுவ ஆரு காணுயது? அவரு எப்டி இருந்தாரு? அதுனால அவரும் சூனியவடிவமாக இருந்தார்..”
”சூனியம் என்றால்? ” என்றார் அவர்
“இல்லாமை . இருட்டு ” என்று நான் சொன்னேன். ”இருப்பது போலத்தெரியும் . கைகளை நீட்டிப்பார்த்தால் தொட முடியாது..”
“என்னடே சொல்லுதே துரைக்கிட்டே? ”
நான் பதில் சொல்லவில்லை. உள்ளே சென்றோம். எண்ணைமணம் அடிக்கும் உள்மண்டபம். கரிய வழவழப்புடன் சுவர்கள் தூண்கள். அடுக்குவிளக்கும் தூக்குவிளக்கும் செவ்விதழ்கள் மலர்ந்து அசைவின்றி நின்றன.
”இதாக்கும் கருவறை. அறுபதடி நீளம். மூணுவாசல்…. ” என்றபடி நாயர் உள்ளே அழைத்துச்சென்றார். ” காலம் இல்லேண்ணா எல்லாமே சூனியம்தானே? சூனியத்திலே காலம் பிறந்துவருது. காலத்துக்க பீஜம். கருத்துளி . அதையாக்கும் பெருமாள் கைவிரலில முத்திரையாக் காட்டுதாரு…. நம்பி தூக்கு வெளக்க ஏத்துங்க…துரை வந்திருக்கான்லே”
“இவனா தொர? மாட்டுக்காரன்போலல்லாவே இருக்கான்…?”
“காசிருக்கவன் துரை. உமக்கென்னவே ? தொறவும்”
” வெளக்குக்கு எண்ண எவன் குடுப்பான்? ஆழாக்கு எண்ண . அதில அம்பது மூர்த்திக்கு வெளக்குவைக்கணும். வெளக்கு அணைஞ்சா என்மேல வந்து கேறுவானுக டிரஸ்டிமாருக….”
“எங்கிட்ட ஏம்வே சலம்புதீரு? சாமிட்டே சொல்லும்?”
“சாமிட்டயா? நல்ல சாமி. கண்ணமூடி அவரு பாட்டுக்கு ஒறங்குதாரு…”
விளக்கொளியில் ஆதிகேசவன் முன் இருந்த ஐம்பொன்சிலைகள் ஒளிவிட்டன.
“எங்கே ஆடிகேசவ்? ”
“பின்னால்….சிலைக்குப் பின்னால்”
“எங்கே?”
“இதோ சிலைக்குப்பின்னால்.இருட்டில்.கருப்பாக…பாருங்கள்…”
“எனக்குத்தெரியவில்லை”
“இதோ-”
அதற்குள் அவர் கண்டு விட்டிருந்தார். வாய் திறந்தபடி நின்றுவிட்டது. இருளை உருக்கி வார்த்து வடித்தது போல நான்கடி உயரத்தில் அறை நிறைத்து படுத்திருந்த மாபெரும் திருமேனி.
”பைசாக்கு பிரச்சினையே இல்லெண்ணு சங்குகிட்ட சொல்லியிருக்கான்வே நம்பி. மூணுவாசலையும் தெறந்து காட்டும். பாத்து அவனாவது சொற்கத்துக்கு போட்டும்…”
“காசுள்ளவன் எப்பவுமே அங்கதானேவே இருக்கான் ? ”
கருவறை முன் அவர் கைகூப்பி நின்றார். போத்திநம்பி மூன்றுவாசல்களையும் திறந்தார். மல்லாந்த நாற்பதடி நீளமுள்ள சிலை. சாலிக்கிராமங்களை அரைத்து பாஷாணமாக்கிச் செய்யப்பட்டது. முதல் வாசலில் மிகப்பெரிய கழலணிந்த பெரும்பாதங்கள். இரண்டாவது வாசலில் கௌஸ்துபம் ஒளிர்ந்த மார்பும் வயிறும். மூன்றாவது வாசலில் ஒளிர்ந்த பொற்கிரீடம் சூடிய கன்னங்கரிய பெருமுகம் மூடிய கண்களுடன் . போத்தி தலைக்குமேல் சிற்றகலைத் தூக்கி காட்டினார். ஒளி கரிய கன்னங்கரிய கன்னங்களில் கரிய திரவம்போல வழிந்தது.
அப்படியே பிரமைபிடித்து போய் நின்றார். கனவுக்குள் விரியும் மாபெரும் புன்னகை போலிருந்தது ஆதிகேசவனின் இதழ்விரிவு. பயங்கரமும் சாந்தியும் ஒன்றாய்கூடிய அறிநகை.
அவர் சொல்லிழந்து போனார். குழம்பியவர் போல, அல்லது அஞ்சியவர் போல சும்மாவே நின்றிருந்தார். நம்பி வெளியே வந்ததும் நூறு ரூபாயை தட்டில் வைத்துவிட்டு ஒருசொல்கூடப் பேசாமல் திரும்பி நடந்தார். அவரது வேகத்துக்கு ஈடுகொடுத்து நான் கூடவே ஓடினேன். அவர் நேராக கோயிலைவிட்டு வெளியே வந்துவிட்டார்.
மாதவன்நாயர் விந்தியபடி பின்னால் ஓடி ” விஷ்ணுதான் பிரபஞ்சம். அவன் பிரபஞ்ச ரூபன் ” என்றார்.
”துரியம் என்றால் என்ன?”
” நினைப்பு. நினைத்து நினைத்து போய் ஒன்றுமே இல்லாமல் ஆகுமே அது… ”
நான் தட்டுத்தடுமாறி மொழிபெயர்த்தேன்.
”கையில காசிலேண்ணாக்க அது நல்லாத்தெரியும்ணு சொல்லுடே ”
அவர் பெருமூச்சுடன் படிகளை இறங்கி மீண்டும் முற்றத்துக்குவந்தார். அரசமரம் இலைகளை சிலுசிலுத்தபடி நின்றது. அதை ஏறிட்டுப்பார்த்தார்.
எங்கள் கோயிலைப் பாராட்டி ஏதாவது சொல்வார் என்று எண்ணினேன். டிரைவரிடம் நூறு ரூபாயைக் கொடுத்து எல்லாருக்கும் கொடுக்கச்சொல்லிவிட்டு காரில் ஏறினார். எனக்கு பணம் தரக்கூடாது என்பதைப் புரிந்துகொள்ளுமளவு நுட்பமான மனிதராக இருந்தார்.
நான் சற்று ஆற்றாமையுடன் கார்க்கதவைப்பற்றியபடி ” எங்கள் கடவுளைப்பற்றி என்ன சொல்கிறீர்கள் ? ” என்று கேட்டேன்.
” இதுதான் கடவுள். மனிதர்களின் கடவுள். ” என்றார் அவர். முகத்தை கைகளால் மீண்டும் மீண்டும் தேய்த்தார். டிரைவர் வந்து ஏறிக் கொண்டார். அவர் கையசைக்க கார் கிளம்பியது. ” என்ன ஒரு நிறம் ! எத்தனை கருமை ! ” வண்டி சற்று நகர்ந்தது .
அவர் எட்டிப்பார்த்து ”என்னை உண்மையிலேயே உனக்குத் தெரியாதா? ”என்றார்
”இல்லையே… ” என்றேன். அவர் விளையாடுகிறார் என்றுதான் எண்ணினேன்.
”உனக்கு கிரிக்கெட் தெரியுமா?”
“தெரியாது”
‘அதுசரி ” . புன்னகையுடன் கார் விலகிச் சென்றது.
அவர் அன்று கண்டதை பத்துவருடம் கழித்துதான் நான் கண்டேன்.
***
MORE
http://www.jeyamohan.in/?p=47
http://www.espncricinfo.com/westindies/content/player/52285.html
http://en.wikipedia.org/wiki/Alvin_Kallicharran

மாடன் மோட்சம் - சிறுகதை


-ஜெயமோகன்


[சில கலைச் சொற்கள்: மோங்குயதுக்கு = குடிப்பதற்கு, நீக்கம்பு = காலரா (Cholera), எரிப்பன் = சாராயம்]
----------------------------------------------------------------------------------------------------------


.ஆடிமாதம், திதியை, சித்தயோகம் கூடிய சுபதினத்தில் சுடலைமாடசாமி
விழித்துக் கொண்டது. இனிப் பொறுப்பதில்லை என்று மீசை தடவிக்
கொதித்தது. கை வாளைப் பக்கத்துப் படிக்கல்லின்மீது கீய்ஞ்
கீய்ஞ்சென்று இருமுறை உரசிப் பதம் வரச் செய்து, பாதக்குறடு
ஒலிக்கப் புறப்பட்டது. சேரி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தது. ஒரு
பயலுக்காவது இப்படி ஒரு தெய்வம், நடுராத்திரி மையிருட்டில் பசியும்
பாடுமாக அல்லாடுவதைப் பற்றிய பிரக்ஞை இல்லை. "வரட்டும்
பாத்துக்கிடுதேன்" என்று மாடன் கறுவிக்கொண்டது. இந்தக் காலத்தில்
சில்லறைத் தொந்தரவுகளாவது தராமல் தேமே என்று இருக்கிற
சாமியை எவன் மதிக்கிறான்? இப்படியே விட்டால் மீசையைக்கூட
பீராய்ந்து கொண்டு போய்விடுவான்கள். இளிச்சவாயன் என்ற பட்டமே
தன்னை வைத்து ஏற்பட்ட மரபுதானோ என்ற சந்தேகம் மாடனுக்கு
வந்தது.

இருண்டதும், சாக்கடை தாறுமாறாக வெட்டி ஓடியதுமான தெருவில்,
பன்றிகளின் அமறல் ஒலித்தது. ஞைய்ங் என்று ஒரு பன்றிக்குட்டி
அன்னையைக் கூப்பிட்டது. மாடனுக்கு நாவில் நீர் ஊறியது. பன்றிக்கறி
படைக்கப்பட்டு வருஷம் நாலாகிறது. வந்த உத்வேகத்தில்
ஒன்றைப்பிடித்து லவட்டி விடலாமென்றுதான் தோன்றியது. ஆனால்
தலைவிதி; சாமியானாலும் சடங்குகளுக்குக் கட்டுப்பட்ட கட்டை,
பலியாக மானுடன் தந்தால் மட்டுமே வயிற்றுப்பாடு ஓயும். திடீரென்று
ஒரு சவலை நாய் 'ளொள்?' என்ற சந்தேகப்பட்டது. தொடர்ந்து நாலா
திசைகளிலும் இருட்டுக்குள், 'ளொள், ளொள்?' என்று விசாரிப்புகள்
எழுந்தன. ஒரு பயந்தாங்குளி அதற்குள் பிலாக்கணமே ஆரம்பித்து
விட்டிருந்தது. சவலை நாசியைத் தூக்கி, மூசு மூசு என்று மோப்பம்
பிடித்தது. மாடனை உணர்ந்ததும் ஒரே பாய்ச்சலாக வராண்டாவில்
ஏறி நின்று, பாட ஆரம்பித்தது. அதைத் தொடர்ந்து சேரியே
ஊளையொலிகளினால் நிறைந்தது. சுடலைமாடசாமி பூசாரி அப்பியின்
குடிசைமுன் வந்து நின்றது. பிறகு கதவிடுக்கு வழியாக ஊடுருவி
உள்ளே போனது. இருட்டுக்குள் பூசாரி 'தர்ர் தர்ர்' என்று குறட்டை
விட்டுக் கொண்டிருந்தான். அவனைத் தன் பட்டாக்கத்தியால் நெற்றிப்
பொட்டில் தொட்டு "பிளேய், எலெய் அப்பி; பிள்ளேய் . . ." என்று
கூப்பிட்டு எழுப்பியது மாடன் ஒரே உதையால் பயலின் தொப்பையை
உடைக்குமளவு வெறி எழாமல் இல்லை. ஆனால் மரபு , என்ன
செய்ய? மேலும் அப்பி பரமபக்தன். "எலேய் பிள்ளே எளிவில மக்கா"
என்றது மாடன். அப்பி "ம்ம்ங் . . . ஜங் . . . சப் ஜப் . . ."
என்று சில ஒலிகளை வாயால் எழுப்பிவிட்டு, வரக் வரக் என்று

சொறிந்து கொண்டான். நல்ல முங்கல். என்னது மசங்கின பனங்கள்ளா,
எரிப்பனேதானா? மாடன் வாசனை பிடித்தது. பிறகு மீண்டும்
எழுப்பியது. ஒரு வழியாகப் பூசாரி எழுந்து அமர்ந்தான். இருட்டில்
அவனுக்கு எதுவுமே தெரியவில்லை. "ஆரு?" என்றான். "நாந்தாம்பில"
என்றது மாடன்.

"ஆரு மாயனா? ஏம்பிலே இந்நேரத்துக்கு" என்றபடி அப்பி வாயை
விரியத் திறந்து, கொட்டாவி விட்டான். "பிலெய் நாறி; இது
நாந்தாம்பில மாடன்" என்றது மாடன், பொறுமையிழந்து போய்.

அப்பிக்குத் தூக்கம் போய்விட்டது. "ஓகோ" என்றபடி எழுந்து
அமர்ந்தான். "வாரும்; இரியும். என்ன காரியமாட்டு வந்தீரு?"
என்றான்.

"காரியமென்ன குந்தம். பிலெய் அப்பி, நீயிப்பம் எனக்க காவுப்
பக்கமாட்டு வந்து எம்பிடு நாளுபில ஆவுது?"

"என்னவேய் ஒரு மேதிரி பேயறீரு? மிந்தா நேத்திக்கு வரேல்லியா?"

"வச்சு காச்சிப்பிடுவேன் பாத்துக்க. பிலேய் அப்பி, நீயாட்டா வந்தே?
கள்ளுவெள்ளமில்ல ஒன்ன கொண்டு வந்தது? பிலெய் நான் கேக்கியது
என்ன, நீ சொல்லுயது என்ன?"

"நீரே செல்லும் ஹாவ் . . ." அப்பி சொடக்கு விட்டபடி
வெற்றிலைப் பெட்டியைத் துழாவி எடுத்தான். "இருமே, வந்த காலிலே
என்னத்துக்கு நிக்கிது?"

"பிலேய் அப்பி, ஒண்ணு ரெண்டல்ல ஆயிரம் வரியமாட்டு
நின்னுகிட்டு இருக்குத காலாக்கும் இது; பாத்துக்க . . ."

"இருக்கட்டும் வேய், நமக்குள்ள என்னத்துக்கு இதொக்கெ?
இரியுமிண்ணே."

"செரி, ஒனக்க இஷ்டம்" என்றபடி மாடன் அமர்ந்தது. "யெக்கப்போ .
. . நடுவு நோவுதுடோய் அப்பி . . . இருந்து கொற காலமாச்சுல்லா."

"செல்லும் வேய்; என்னவாக்கும் காரியங்க?" என்றான் அப்பி.

"என்னாண்ணு சென்னா, இப்பம் வரியம் மூணு ஆவுது கொடயாட்டு
வல்லதும் கிட்டி."

அப்பி திடுக்கிட்டு, "அடப்பாவி . . . உள்ளதுதேன், நானும்
மறந்துல்லா போனேன்" என்றான்.

"பூசெ வல்லதும் நடத்துத எண்ணம் உண்டுமா?"


"என்னை என்னௌவுக்குக் கேக்குதீரு? நான் அங்க வந்து
மோங்குயதுக்கு பகரம் நீரு இஞ்ச வந்து கண்ணீரு விடுதீராக்கும்?
இஞ்ச இன்னத்த கோப்பு இருக்க, கொடை நடத்துயதுக்கு?"

"ஒனக்க கிட்ட ஆரு பிலேய் கேட்டது? நமம பிரஜைகளுக்குச்
செல்லிப்போடு."

"என்னது பிரஜைகளா? ஆருக்கு, ஒமக்கா? எளவுக்க கததேன் ஹெஹெ
. . ."

"ஏம்பிலேய்?" என்றது மாடன் அதிர்ச்சியடைந்து.

"அடக் கூறுகெட்ட மாடா" என்று பூசாரி சிரித்தான். புகையிலையை
அதக்கியபடி. "அப்பம் ஒமக்கு காரியங்களுக்க கெடப்பொண்ணும்
அறிஞ்சூடாமெண்ணு செல்லும்."

"என்னத்த அறியியேதுக்கு?"

"இப்பம் சேரியில ஏளெட்டு பறக்குடிய விட்டா, பாக்கியொக்க
மத்தசைடு பயவளாக்கும் பாத்துக்கிடும்."

"மத்தவனுவண்ணு சென்னா?"

"வேதக்காரப் பயவளாக்கும்."

"அவனுவ இஞ்ச எப்படி வந்தானுவ?"

"இஞ்ச ஆரும் வரேல்ல. ஒம்ம பிரஜைகள்தான் அங்க செண்ணு
நாலாம் வேதம் வாங்கி முங்கினானுவ. ரெட்சணிய சேனேன்னு பேரு
சவத்தௌவுக்கு."

"அப்பிடி வரட்டு" என்றது மாடன் ஏமாற்றமாக.

"அவியளுக்க சாமி உன்ன மாதிரி இல்ல."

"வலிய வீரனோவ்?"

"ஒண்ணுமில்ல; தாடி வச்சுக்கிட்டு, பரங்கி மாம்பளம் கணக்கா ஒரு
மேதிரிப் பாத்துக்கிட்டு, இருக்குதான். நெஞ்சில ஒரு கலயம் தீபோல
எரிஞ்சுக்கிட்டு இருக்குது."

"ஆயுதம் என்ன வச்சிருக்கானாம்?"

"நீரிப்பம் சண்டைக்கும் வளக்குக்கும் ஒண்ணும் போவாண்டாம். அவன்
ஆளு வேற . வெள்ளக்காரனாக்கும்."

"பரங்கியோ?" மாடனின் சுருதி தளர்ந்தது.

"பின்னே? ராவிப் போடுவான். ஒமக்குக் கட்டாது. பேயாம காவில
இருந்துப் போடும்."

"அப்பம் பின்ன கொடைக்கு என்னலேய் வளி? கும்பி எரியுதே?"

"இஞ்ச பாரும். நீரு இப்பிடி மீசைல காக்காப்பீயும் வடிச்சு கிட்டு
நின்னீருண்ணு சொன்னா ஒரு பய ஒம்ம மதிக்க மாட்டான்."

"பின்னெயிப்பம் என்னலெய் செய்யணும் இங்கியே?"

"நாலு நீக்கம்பு, குரு எண்ணு எடுத்து வீசுமே. மத்த பயலுவ இப்பம்
இஞ்ச வாறதில்ல. டவுணுக்கு செண்ணு கலர் வெள்ளமும் குளிகெயும்
திங்கியானுவ. ஒம்ம நீக்கம்பு பரவி நாலு வேதக்காரனுவ தலெ
விளணும். ஆத்தா சாமி எண்ணு கரஞ்சிக்கிட்டு தாளி மவனுவ இஞ்ச
ஓடிவரணும். மடிசீலயக் கிளிச்சுப் போட மாட்டானா? அம்ம தாலிய
அறுத்துப்போட மாட்டானா? எரப்பாளிப் பெயவ களிச்சினும். அப்பிக்க
கிட்டயாக்கும் களி பாக்குதேன் . . ."

"தீவாளிப் பெகளத்திலயும் ஒனக்கு இட்டிலி யாவாரம் . . ." என்றது
மாடன், இளக்காரமாக.

"பின்னே? நான் நல்லாயிருந்தாதானே ஒமக்கு?"

"செரி பாக்குதேன்."

"பாக்கப்பிடாது; செய்யும். வாரி வீசும் நல்லா. மடி நெறய இருக்கே
பண்டார வித்து. வரியம் பத்து ஆவுதில்லா. பயவ மறந்துப்
போட்டானுவ மாடா. பேடிச்சாத் தான்லே இவிய வளிக்கு வருவினும்."

"செரி, வாறேன்."

"வேய் மாடா நில்லும்" என்றான் அப்பி. "எளவ வாரிகிட்டு கால்
பளக்கத்தில் இஞ்ச வந்திடாதியும். நாலெட்டு நீங்கி வீசும்."

"செரிலேய் அப்பி. பாக்கிலாம்" என்றபடி மாடன் புறப்பட்டுச்
சென்றது.

"வாளை மறந்து வச்சுக்கிட்டு போவுதீரே?"

"வயதாச்சில்லியா?" என்றபடி மாடன் வந்து எடுத்துக்கொண்டது.
"வரட்டுமாடேய் அப்பி."

"நீரு தைரியமாட்டு போவும்வேய் மாடா . . ." என்று அப்பி விடை
கொடுத்தான். மீண்டும் புகையிலையை எடுத்தபடி.

=======
இரண்டு
=======

மாடன் போகும் வழியிலேயே தீர்மானித்துவிட்டது. வேறு வழியில்லை.
ஒரு ஆட்டம் போட்டுத்தான் தீர வேண்டியிருக்கிறது. அந்தக் காலத்தில்
செயலாக இருந்துபோது ரொம்பவும் சாடிக்குதித்த சாமிதான். காலம்
இப்போது கலிகாலம். காடு மேடெல்லாம் காணாமல் போய், எங்குப்
பார்த்தாலும் வீடும், தார் ரோடும், சாக்கடையும், குழந்தைகளுமாக
இருக்கிறது. முழு எருமை காவு வாங்கிய அந்தப் பொன்னாட்களில்
இப்பகுதி பெரிய காடு. ஊடே நாலைந்து குடிசைகள். அப்பியின்
முப்பாட்டா ஆண்டி மாதாமாதம் கொடை நடத்திப் பலி தந்ததும்,
அஜீர்ணம் வந்து பட்ட அவஸ்தைகளுக்கெல்லாம் மாடனின் மனசுக்குள்
இன்னமும் பசுமையாகத்தான் இருக்கின்றன. என்ன செய்ய?
ஆனானப்பட்ட திருவட்டார் ஆதிகேசவப் பெருமாளுக்கே அந்திப்படிக்கு
முட்டு எனும்போது குட்டி சாமிக்கு என்ன கொட்டியா வைத்திருக்கிறது?
ஏதோ இந்த மட்டும் அப்பியாவது விசுவாசமாக இருக்கிறானே!

தன் கூடையின் விதைகளின் வீரியம் பற்றி மாடனுக்குச் சற்று
சந்தேகம்தான். முன்பெல்லாம் காடும் வருடம் முழுக்க மழையும்
இருந்தது. வீசியது என்றால் ஒன்றுக்குப் பத்தாக முளைக்கும். இப்போது
இந்த வெயிலில், தார்ச்சாலையில் எவன் சட்டை செய்யப் போகிறான்.
எனினும் கடமையைச் செய்துவிடத் தீர்மானித்து, நள்ளிரவில் பாளைத்
தாரை வரிந்து கட்டிக்கொண்டு கிளம்பியது. எது வேதக்காரன் வீடு,
எது நம்மாள் வீடு என்று எப்படி அறிவது? குத்து மதிப்பாக வீசி
வைத்தது. எதற்கும் ஜாக்ரதையாக அப்பியின் தெருப்பக்கமே
போகவில்லை. தப்பித் தவறி ஏதாவது ஆயிற்றென்றால் சஸ்திரம்
பண்ணிவிடுவான்.

திரும்பி வந்து சப்பக்கொட்டிக்கொண்டு அமர்ந்தது. இரண்டு நாள்
ஒன்றும் ஆகவில்லை. யாரும் திரும்பிப் பார்க்கவில்லை. மூன்றாம் நாள்
சிகப்பு பட்டாடை கட்டி, சதங்கையும் வாளும் குலுங்க, வாயில்
வெற்றிலைச் சாறு தளும்ப, அப்பி அவ்வழியாக அவசரமாகப்
போனான்.

"எலேய் அப்பி, தூரமா?" என்றான் மாடன்.

அப்பிக்குக் கோபம் வந்தது. "என்னவேய் இப்பம்? ஒரு காரியமாட்டு
போவும்பம் பெறவீண்ணு விளிச்சலாமா? சாமியானா சாத்திரம் மாறிப்
போவுமோ?"

"மறந்து போட்டேம்பில" என்றது மாடன் பரிதாபமாக.

"செரி செல்லும். என்னவாக்கும் அரிப்பு?"

"என்னலேய் ஆச்சு, நம்ம காரியங்க?"

"ஒலக்கெ" என்று அப்பி கையைக் காட்டினான்.

"மொளைக்கியதுக்கு என்ன? நீக்கம்பு படந்திருக்கிய உள்ளதுதேன்.
ஆனா பிரயோசனம் இல்லியே."

"என்னத்த?" என்றது மாடன் புரியாமல்.

"அவனுவ வெள்ளைச்
கொண்டாந்துட்டானுவ
வெள்ளமும் குளிகெயும்
நீரும் உம்ம வித்தும் .

மாடனுக்கு அய்யே என்று ஆகிவிட்டது. "நீயிப்பம் எங்க லேய்
போறே?"

"கஞ்சிக்கு வளி காணணுமே. நாலு வீடு செண்ணு மாடன மறந்து
போடாதிய எண்ணு செல்லிப் பாக்குதேன். பத்துபேரு சிரிச்சுத்
தள்ளினா ஒருத்தன் விள மாட்டானா? இப்ப ராசப்பன் கெட்டினவ
விளிச்சிருக்கா" என்றான் அப்பி.

"கிடாய்க்கு வளியுண்டாடோய்?"

"என்னது?"

மாடன் தணிந்த குரலில், "கிடா" என்றது.

"கட்டேல போக! 'அம்பது பைசா கோளிக் குஞ்சு ஒண்ணு
போராதோ' எண்ணுகேக்குதா அறுதலி. உமக்கு இஞ்ச கிடாய்
கேக்குதோ?"

"செரி விடு. எரிப்பனெங்கிலும் கொண்டு வா. அரக்குப்பி போரும்."

"எரியும், நல்லா எரியும். நான் வாறேன். வந்து பேயுதேன்
ஒம்மக்கிட்டே."

மாலையில் களைத்துப் போன அப்பி வந்து சேந்தான். சோனிக்
கோழி ஒன்றையும் கால்குப்பி எரிப்பனையும் படைத்தான்.

நாக்கைச் சப்பியபடி மாடன் சொன்னது, "அமிர்தமாட்டு இருக்குடேய்
அப்பி."

"காலம் போற போக்கப் பாருமே. முளு எருமை முளுங்கின நீரு . .
."

"தின்னுக்கிட்டிருக்கும்பம் மனசக் கலக்குது மேதிரி பேயாதே டேய்
அப்பி. கோளி அம்பிடுதேனா?"

சட்டைக்காரனுவளை இஞ்சயே
வேய். நம்ம பயவகூட அங்க செண்ணு கலர்
வாங்கித் திங்கியானுவ; பெறக்கிப் பய மவனுவ.
. ."

"இல்லை; நான் தின்னுட்டேன். என் குடலைப் பிடுங்கித் திங்கும்."

"கடேசில அதும் வேண்டி வரும் எண்ணுதான் தோணுதுடேய் அப்பி"
மாடன் கடகடவென்று சிரித்தது.

அப்பி பயந்து போனான். எனினும் அதை வெளியே காட்டாமல்
"பயக்கம் பேயுத மூஞ்சியப்பாரு; ஓவியந்தேன்" என்று நொடித்தான்.

மீசையைக் கோதியபடி மாடன் தலையை ஆட்டிச் சிரித்தது.

"அப்பம் இன்னி என்னவாக்கும் பிளான்?" என்றான் அப்பி.

"ஒறங்கணும்" மாடன் சோம்பல் முறித்தது.

"சீருதேன். அடுத்த கொடைக்கு என்ன செய்யப் போறீரு எண்ணு
கேட்டேன்."

"ஆமா, உள்ளதுதேன்" என்றது மாடன் மந்தமாக.

"என்ன உள்ளது? மீசயப்பாரு. தேளுவாலு கணக்கா, மண்டைக்குள்ளே
என்னவேய் களிமண்ணா?"

"பிலேய் அப்பி. எனக்க சரீரமே களிமண்ணுதானேல மக்கா.
ஹெஹெஹெ . . ."

"அய்யோ அய்யோ" அப்பி தலையிலடித்துக் கொண்டான்.

"செரி இல்ல; நீ சொல்லு" என்று மாடன்.

"இன்னியிப்பம் ஒமக்க வித்து எறியுத வேலயெல்லாம் பலிச்சுக்கிடாது."

"உள்ளதுதேன்."

"வேற வளி வல்லதும் பாக்கணும்."

"வேற வளி பாக்கணும்" என்றது மாடன் குழந்தை போல.

"அவியக்கிட்ட நம்ம காவையும் பார்த்துக்கிடச் சென்னா என்ன
வேய்?"

"அவியள்லாம் இந்துக்க இல்லியா? மாடனுக்கு அங்க என்ன டேய்
காரியம்?"

"இவிய வேதத்தில் சேத்துக்கிடுகிடுவானுவ அப்பம் இந்துக்க அங்க
சேக்க மாட்டினுமா? பிலேய் மாடா ஒண்ணி அங்க, இல்லெங்கி இஞ்ச;
ரண்டுமில்லாம இன்னி நிக்கப் பளுதில்ல வேய்."

"ஒனக்க விருப்பம் போலச் செய்யி" என்றது மாடன் நிர்க்கதியாக.

"எனக்க பிளான் என்னாண்ணு கேட்டியானா, ஒன்னய. மறிச்சுப்
போட்டுட்டு இஞ்ச ஒரு சிலுவய நாட்டுவேன். அருவத்தில ரெட்சணிய
பொரம் எண்ணு ஒரு போர்டும் எளுதி வச்சிடலாம் எண்ணு
பாக்குதேன்."

"பாவி மட்டே; என்ன எளவுக்கு டேய் அப்பி இதொக்க?" என்றது.
பீதியுடன் கேட்டது மாடன். "இப்பம் இப்படி நின்னுக்கிட்டாவது
இருக்குதேன். மறிஞ்சா பின்ன எள ஒக்கும் எண்ணும் தோனேல்ல."

"நீரு பயராதியும் வேய் மாடா; ஏமான் பெயவ ஒம்ம பொன்னு போல
பாத்துக்கிடுவினும்."

"அதுக்கு ஏன் டேய் இதொக்கெ?"

"வேய் மாடா, இப்பம் ஆதிகேசவன் கோவிலும் அம்மன்
கோவிலுமொக்கெ எப்பிடி இருக்கு அறியிலாமா வேய்? கொலு
கொலுண்ணு வேய். வெளக்குக்கு வெளக்கென்ன; மந்திரமென்ன;
நாலு சாமத்துக்கு பூசெ . . . கண்டாமணி . . . வரியத்துக்க மூணு
திருவிளா. படையல் . . . கோளோட கோளுதான். இப்பம் இஞ்ச
மகாதேவருக்கு ஸ்பீக்கரும் வாங்கப் போவினுமாம். நம்ம மகாதேவரு
கோவிலிலே எம்பிடு கூட்டம் தெரியுமா?"

"அது என்ன லேய் ஸ்பீக்கறு?"

"காலம்பற பாட்டு போடுயதுக்கு. அதுக்க சத்தமிருக்கே, நூறுபறை
கொட்டினா வராதுவேய். நம்ம மூலயம் வீட்டு கொச்சேமான்
கோபாலன்நாயருதான் அதுக்க பெரசரண்டு. ஒரு கூட்டம் ஏமான்
பெயவ காக்கி டவுசரு இண்டோண்டு கசரத் எடுக்கணும். டவுசரு
இட்டனுவ ஆறெஸ்ஸ§. மத்தவனுவ இந்துமின்னணி."

"அங்க கோளி உண்டோவ்?"

"அரிஞ்சுப் போடுவேன் பாத்துக்கிடும். நான் இஞ்ச மினக்கெட்டு
யோசனை செய்யுதேன்; நீரு கோளியிலே இருக்குதீராக்கும்."

"இப்பம் என்னலேய் செய்யப் போறே?" என்று மாடன் அலுப்புடன்
கேட்டது.

"ஏமான் பெயவளுக்கு ஒரு சொரனை வரட்டும் எண்ணுதேன் வேய்.
அவியளுக்கு வேற என்னத்த செய்தாலும் சகிக்கும், பேர மாத்தினா
மட்டும் விடமாட்டானுவ" என்றான் அப்பி.

"என்னௌவோ, எனக்கொண்ணும் செரியா தோணேல்ல. ஒனக்க
இஸ்டம்" என்றது மாடன்.


"நீரு தைரியமாட்டு இரும்வேய் மாடா. நான் என்னத்துக்கு
இருக்குதேன்? ஒமக்கொண்ணு எண்ணு சென்னா நான்
விட்டுருவேனா?"

"எனக்கு நீயில்லாம ஆரும் இல்லலேய் அப்பி" மாடன் தழுதழுத்தது.

"நான் உம்ம விட்டுட்டு போவமாட்டேன் வேய் மாடா பயராதியும்"
அப்பி மாடனைத் தோளில் தட்டிச் சமாதானம் செய்தான். "இப்பம்
என்னத்துக்கு மோங்குதீரு? வேய் இஞ்சபாரும், ஏமான் பெயவ ஒமக்கு
நல்ல முளுக் கிடாய வெட்டி பலி போடாம இருப்பினுமா? என்னது,
முளுக்கிடா . . . பாத்தீரா சிரிக்குதீரு."

மாடன் சோகமான முகத்துடன் சிரித்தது. அப்பியும் உரக்கச்
சிரித்தான். புட்டியில் எஞ்சியிருந்த ஓரிரு துளி எரிப்பனையும்
அண்ணாந்து நாக்கு நீட்டி அதில் விட்டுக் கொண்டான்.

========
மூன்று
========

அப்பால் நடந்ததெல்லாம் மாடனுக்குத் சரியாகத் தெரியாது. குட்டி
தேவதையாக இருந்தாலும் அதுவும் கடவுள்தானே! தன்னை மீறிய
சம்பவங்களின் போது கல்லாகிவிடுதல் என்ற பொது விதியிலிருந்து அது
மட்டும் எப்படித் தப்ப முடியும்? அன்றிரவு அப்பி மாடனைப் புரட்டிப்
போட்டு, பீடத்தின்மீது மரச்சிலுவை ஒன்றையும் நட்டுவிட்டுப்
போனான். மாடனுக்கு மார்பை அடைத்தது. எத்தனை
தலைமுறைகளைக் கண்டது. கடைசியில் பசிக் கொடுமையில் நாடகம்
போட வேண்டிய நிலை வந்துவிட்டது. ஏதோ எல்லாம் ஒழுங்காக
நடந்தேறி, வருஷா வருஷம் கொடை மட்டும் முறையாக கிடைத்துத்
தொலைத்தால் போதும். கும்பி ஆறினால் அது ஏன் வேறு வம்புகளில்
தலையிடப் போகிறது?

மாடன் படுத்தபடியே, வாளைக் கிடையாகப் பிடித்தபடி, உருட்டி
விழித்து இளித்தது. மழை பெய்து தொலைக்குமோ என்று பயம் வந்தது.
கூரையும் இல்லை . . . ஜலசமாதிதான் கதி.

அப்பி மறுநாள் காலையிலேயே வந்துவிட்டான். குய்யோ முறையோ
என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு அழுதான். பழைய
பறையர்கள் சிலருக்கு ஞானோதயம் வந்து, மாடனைத் தரிசிக்க ஓடோடி
வந்தனர். முத்தம்மா கிழவி உடனே ஒப்பாரி பாடும் நட்சத்திரம்மாவுக்கு
தகவல் சொல்ல அவளுகும் பரிவாரங்களும் வந்திறங்கி சுருதி கூட்டி,
லய சுத்தமாக குரல் எழுப்ப, கூட்டம் களை கட்டிவிட்டது. அப்பிக்கே
பயங்கரமான சோகம் வந்துவிட்டது. மாடனின் காம்பீர்யம்
அந்நிலையிலும் ஜ்வலிப்பதாய் சிலர் புல்லரித்தனர். ஒரு சில
வேதக்கார ஆசாமிகளும் வந்து எட்டி நின்று பார்த்தனர். என்ன
இதெல்லாம் என்று அவர்களுக்குப் புரியவேயில்லை. மாடனின்


வீழ்ச்சியில் அவர்களுடைய பரம்பரை மனம் நோகத்தான் செய்தது.
எவனோ வம்புக்காரப் பயல் செய்த வினை; மாடனின் பீடத்திலே
சிலுவைக்க என்ன வேலை என்று கருதிய எட்வர்டு என்ற முத்தன்
அப்பிக்கு ஒரு கை கொடுத்து மாடனைத் தூக்கி நிறுத்த உதவ
முன்வந்தான்.

அப்பி ஆக்ரோஷம் கொண்டான். "ச்சீ மாறி நில்லுலே, மிலேச்சப்
பயல. மாடன் சாமியைத் தள்ளிப் போட்ட பாவி. ஒனக்க கொலம்
வெளங்குமாவிலே?"

எட்வர்டு முத்தன் தயங்கினான். "ஆருலே தள்ளிப் போட்டது?"

"நீதாம்பிலே. ஒங்க கூட்டம் தாம்பிலே தள்ளிப் போட்டது" மடேரென்று
மார்பில் ஓங்கி அறைந்தபடி அப்பி கூவினான்.

"பிலேய் ஆருவேணுமெங்கிலும் போங்கலேய். பால்ப் பொடியும்
கோதம்பும் குடுத்து அப்பிய வளைக்க ஒக்காதுலேய். நான் இருக்க
வரைக்கும் ஒரு பயலும் மாடனைத் தொடவிடமாட்டேம்பிலேய் . . ."

வார்த்தை தடித்தது. குட்டிக் கைகலப்பு ஒன்று நடந்தது. இரு
தரப்பினரும் விலக்கப்பட்டனர். அப்பி திங்கு திங்கென்று குதித்து,
சன்னதம் கொண்டு ஆடினான்.

உபதேசி குரியன் தோமஸ் கூறினான், "அதொக்கெ செரிதன்னே
அப்பி, குரிசில் மாத்திரம் தொடண்டா. அது சுயம்பாணு."

சேரியே கலகலத்தது. சுயம்பு சிலுவை உதயமான சேதி அண்டை
அயலுக்குப் பரவி ஊழியக்காரர்களும் விசுவாசிகளும் குழுமத்
தொடங்கினார்கள். கட்டைக் குரலில் குரியன் தோமஸ், "எந்ததிசயமே
தெய்வத்தின் சினேகம்" என்று பாட, தெருவில் சப்பணமிட்டு அமர்ந்த
மீட்கப்பட்ட மந்தைகள் ஜால்ரா தட்டித் தொடர்ந்து பாடின. பரமார்த்த
நாடார் அங்கே உடனே ஒரு வெற்றிலைப் பாக்குக் கடை திறந்தார்.
ஞானப் பிரகாசத்தின் சுக்குக் காப்பித் தூக்கும் வந்து சேர்ந்தது.
வெள்ளைச் சேலையைக் கழுத்து மூடப் போர்த்திய, கணுக்கை மூடிய
ஜாக்கெட் தரித்த, வெற்று நெற்றியும் வெளிறிய முகமும் கொண்ட,
தேவ ஊழியப் பெண்கள் பக்திப் பரவசத்தில் அழுதார்கள்.
குழந்தைகள் ஒன்றுக்கிருந்தும், வீரிட்டலறியும் களைகூட்டின. மீதமிருந்த
ஆறு அஞ்ஞானிக் குடும்பங்களும் மீட்கப்படுதலுக்கு உள்ளாகி விடலாமா
என்று தயங்கிக் கொண்டிருந்தபோது கார் நிறைய ஏமான்கள்
வந்திறங்கினர்.

காதிலே அரளிப்பூ செருகி, சந்தனக் குங்குமப் பொட்டு போட்டு,
சிவந்த ராக்கி நூலைக் மணிக்கட்டில் கட்டி, காவி வேட்டியும்
சட்டையுமாக வந்த கோபாலன் நேராக அப்பியை அணுகினான். அப்பி
அப்படியே சரிந்து ஏமானின் கால்களில் விழுந்தான். ரட்சணியபுரம்


என்று கிறுக்கப்பட்டிருந்த பலகையையும், சிலுவையையும் கோபாலன்
புருவம் சுருங்க உற்றுப் பார்த்தான்.

"ஆரும் ஒண்ணையும் தொடப்பிடாது. எங்க அண்ணாச்சி?
பாத்துக்கிடுங்க. நான் போலீசோட வாறேன்."

பஜனைக் குழுவில் அமைதி கலைந்தது. "ஓடுலே காவிரியேலு . . .
ஓடிச் செண்ணு வலிய பாஸ்டர வரச் செல்லு" என்றார் டீக்கனார்
வேலாண்டி மைக்கேல்.

ரகளை தொடங்கிவிட்டது என்று மாடன் அறிந்தது. கண்ணை மூடியது;
அப்பியும் ஜாக்ரதையாக இருக்க வேண்டுமென்று தீர்மானித்தான். பிறகு
அவனை அப்பக்கமாகக் காணவில்லை.

போலீஸ் வந்தது. தொடர்ந்து பெரிய பாஸ்டர் அங்கி பளபளக்க வந்து
சேர்ந்தார். சிலுவையைப் போலீஸ் அகற்ற வேண்டும் என்று குங்குமப்
பொட்டுக்காரர்களும், அது சுயம்பு எனவே அங்கேயே இருக்கட்டும்
என்று பாதிரியாரும் வற்புறுத்தினர். போலீஸ் குழம்பியது. கடைசியில்
முரட்டுத்தனமான லத்திச் சார்ஜ் வரை சங்கதிகள் சென்றடைந்தன.
டேனியல் குஞ்சனுக்கு மண்டையும், எஸ்தர் சின்னப் பொண்ணுக்கு
முழங்காலும் உடைய நேர்ந்தது.தொடர்ந்து மூன்று நாட்கள் மாடனுக்குப்
போலீஸ் காவல். சேரியிலும் சந்தையிலும். அடிதடியும் கொலையும்
தண்ணீர் பட்டபாடு ஆயின. மொத்தம் ஏழு என்றார்கள். பாக்கி
தொண்ணூற்று மூன்றை நதியில் வீசிவிட்டார்கள் என்றது வதந்தி.
அப்பியைக் கண்ணிலே காணவில்லை. போலீஸ் துப்பாக்கிச் சூடு,
சமாதானப் பேரணி, நூற்றி நாற்பத்து நாலு, ஆர்.டி.ஓ. விசாரணை,
நீதி கேட்டு உண்ணாவிரதம், போஸ்டர் யுத்தம், மந்திரி வருகை,
சேலை தானம், சர்வ கட்சி சமாதானக் கூட்டம் ,சர்வ மதத்
தலைவர்கள் அறிக்கை என்று சரித்திர வழமைப்படி சம்பவங்கள்
நடந்தேறின. சமாதானப் பேச்சு வார்த்தையின் முடிவில் ஒப்பந்தம்
உடன்பாடானது. தொடர்ந்து ஆள்பிடிக்கும் வேட்டை. "என்ன
இருந்தாலும் அவிய ஏமான்மாருங்க. பறப்பய எண்ணும் பறப்பயதான்"
என்று பாதிரியார் வீடுவீடாகச் சென்று உபதேசம் செய்தார். "மறந்து
போச்சா பளைய கதையொக்கெ? அங்க வலிய கோவில் பக்கமாட்டு
உங்களயொக்கெ போவ விடுவனுமா? அவிய செத்தா நீங்க மொட்ட
போடணும் எண்ணு அடிச்சவனுவதானே? இப்பம் என்னத்துக்கு
வாறானுவ?"

சேரியில் ஹிந்துமதப் பாடசாலை ஒன்று ஆரம்பிக்கப்பட்டது.
சொர்ணமலை தீபானந்தசாமி வந்து அனைவருக்கும் ஆசியளித்து, சாதி
ஏதானாலும் ஹிந்து ஹிந்துதான் என்றார். ஒரே போடாக
கிறிஸ்தவர்களும் ஹிந்துக்களே என்று அவர் கூறியது சற்று அதிகம்
என்று பலர் அபிப்பிராயப்பட்டனர். சனாதன தருமம் என்றுமே
அழிவற்றது என்று முழங்கினார். ஆகவே ஹிந்துமதத்தைக் காக்க
இளைஞர்கள் முன்வரும்படி கண்ணீர் மல்க வேண்டினார். யாரும்


மதம் மாறுதல் கூடாது என்று கெஞ்சினார். அப்பி பட்டு உடுத்தி,
வாள் ஏந்தி, கூட்டுப் பஜனைக்கு வந்ததும், அங்கே தாதிங்க தெய்
என்று ஆடியதும் பொதுவாக ரசிக்கப்படவில்லை. அவன் எரிப்பனில்
முங்கி வந்திருந்தான். வீடு வீடாகச் சென்று விளக்குப் பூஜை செய்வது
பற்றிக் கற்பிக்க சகோதரி சாந்தா யோகினி தலைமையில் மாமிகள்
முன்வந்தனர். சேரிப் பிள்ளைகளுக்குப் போஜன மந்திரம் கற்பிக்கும்
பணி எதிர்பார்த்ததைவிடவும் மூன்று மாதம் அதிகமாக எடுத்துக்
கொண்டது. சுற்றுப்புற ஊர்களில் எல்லாம் மாடனின் பெருமை
பறைசாற்றப்பட்டு, ஜனங்கள் தரிசனம் செய்ய வந்தனர். புராணகதா
சாகரம் அழகிய நம்பியாபிள்ளை வந்து திருவிளையாடல் புராணமும்
திருப்புகழும் விரித்துரைத்தார். சுடலைமாடனின் உண்மையான வரலாறு
அவரால் வெளிப்படுத்தப்பட்டது. தட்சன் யாகம் செய்தபோது தன்னை
முறைப்படி அழைக்காததனாலும், பார்வதியை
அவமானப்படுத்தியமையாலும் சினம் கொண்ட சிவபெருமான் நெற்றிக்
கண் திறந்து, ஊழி நடனம் ஆடி, யாக சாலையை அழித்தார்.
அப்போது அவர் பிடுங்கி வீசிய சடைமுடிக் கற்றைகளிலிருந்து
பத்ரகாளியும், வீரபத்திரனும் உதித்தனர். உதிரி மயிர்களில் இருந்து
உதித்த அனேக கோடி பூதகணங்களில் ஒருவன்தான் மாடன் என்று
அவர் அறிவித்தார். "சிவனின் மகனே போற்றி! சீரெழும் எழிலே
போற்றி! சுடலை மாடா போற்றி! போற்றி!" என்று அவர் நெக்குருகிப்
பாடினார். இத்தனை நாள் கவனிப்பாரற்றுக் கிடந்த மாடன் கோவில்
இனிமேலும் இப்படியே கிடக்கலாகாது என்று அவர் கூறினார்.
உடனே முறைப்படி பிரதிஷ்டை செய்து பூஜை புனஸ்காரதிகள்
செய்யப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். நிதி வசூல்
தொடங்கியது.

எதிர் முகாமிலும் நிதிவசூல் பரபரப்பாக நடைபெற்றது. சுயம்பு
சிலுவையைத் தரிசிக்க வந்தவர்கள் தேங்காய், கோழி, சிலசமயம் ஆடு
முதலானவற்றைத் தானம் செய்தனர். அவை அங்கேயே
ஏலமிடப்பட்டன. இருசாரரும் சிலசமயம் கைலப்பில் இறங்கினாலும்,
பெரிதாக அசம்பாவிதம் ஏதும் நிகழவில்லை. பெரியதோர் தேவாலயம்
அங்கு அமைக்கப்படும் என்று சபை அறிவித்தது. அங்கு அற்புதங்கள்
நிகழ ஆரம்பித்தன. நெய்யூரை சார்ந்த ஜெபமணி-எஸ்தர் தம்பதிகளின்
குழந்தை சாம்சன் அருமைராசனுக்கு சிறுவயதிலேயே போலியோ வந்து
நைந்துபோன கால் இங்கு வந்து கண்ணீருடன் முட்டிப்பாக
ஜெபித்தபோது சரியாக ஆயிற்று. இதைப் போலவே திருச்சி
அன்புசாமி, பாளையங்கோட்டை நத்தானியேல், வல்லவிளை அக்னீஸ்
ஆகியோருக்கு வேலையும், ஞாறாம்விளை பாக்கியமுத்துவிற்கு
லாட்டரியில் ஐநூறு ரூபாய் பரிசும், கிறிஸ்துராஜா நகர் ஹெலனா
புரூட்டஸ§க்கு பரிட்சையில் ஜெயமும் கர்த்தரின் வல்லமையினால்
கிடைத்ததாக சாட்சி சொல்லப்பட்டது. ஞானப்பிரகாசம் அன்ட்
சன்ஸின் 'சுயம்பு கிறிஸ்துராஜா ஓட்டலும்' பரமார்த்த நாடாரின்
'மாடசாமித் துணை ஸ்டோர் வியாபாரமும்' விருத்தி அடைந்தன.
கலெக்டர் சம்சாரமே மாடனைக் கம்பிட வந்தாள். மறுநாளே
திருநெல்வேலியில் இருந்து மந்திரி சம்சாரம் வந்து முழு இரவு

எழுப்புதல் கூட்டத்தில் கலந்து கொண்டாள். பிஷப் வந்த அன்று
அறுநூறு பேருக்கு அன்னதானமும், நூறு குழந்தைகளுக்கு
ஞானஸ்நானமும் அளிக்கப்பட்டது.

மறுவருஷம் நடந்த இருமத சமரசக் கூட்டத்தில் தமிழ் தெரியாத
கலெக்டர் உரையாற்றினார். ஆர்.டி.ஓ. தவசி முத்துப் பிள்ளை மேரியும்
மாரியும் ஒன்றுதான் என்று பேசியதைப் பிஷப் ரசிக்கவில்லை என்று
பிற்பாடு குறிப்பிடப்பட்டது. சர்வமத ஒற்றுமை காக்கப்பட வேண்டும்
என்றும், சுடலை மாடசாமிக் கோவில் தெருவின் கிழக்கு முனையிலும்,
சுயம்பு கிறிஸ்துராஜா ஆலயம் மேற்கு மூலையிலும் நிறுவப்பட
வேண்டும் என்றும்; தர்க்க பூமி சர்க்காருக்கு விடப்படும் என்றும் மத
ஒற்றுமை எக்காரணத்தாலும் தகர்க்கப்பட அனுமதிக்கலாகாது என்றும்
ஏகமனதாக, ஒரு அபிப்பிராய வித்தியாச ஓட்டுடன்,
தீர்மானிக்கப்பட்டது. அசைவர்களுக்கு முயல் பிரியாணியும், பிறருக்கு
வடை பாயாசத்துடன் சோறும் அரசுச் செலவில் வழங்கப்பட்டது. இரு
சாரரும் போட்டோப் புன்னகையுடன் மறுநாளே தந்தி பேப்பரில்
மைக்கறையாகத் தெரிய நேர்ந்தது. தருக்க பூமியில் ஒரு காந்தி சிலை
நிறுவப்படும் என்ற முடிவை கலெக்டர் மறுவாரம் பலத்த கைதட்டலுக்கு
இடையே, சேரியில் நடந்த கூட்டத்தில் அறிவித்தார். அந்தச் செலவை
மாவட்ட கருவாடு மற்றும் கொப்பரை ஏற்றுமதியாளர் சங்கம் ஏற்கும்
என்ற அதன் தலைவர் பச்சைமுத்து நாடார் மேடையில் ஒத்துக்
கொண்ட இனிய நிகழ்ச்சியும் நடந்தேறியது.

======
நான்கு
======

இவ்வளவிற்கும் பிறகுதான் மாடன் கண்விழித்தது. அப்போது அது புது
இடத்தில் இருந்தது. எதிரே கோயில் கட்டும் பணி வெகு மும்முரமாக
நடந்து கொண்டிருந்தது. சற்றுப் பெரிய கோவில்தான். மாடன் ஆறடி
உயரமாயிற்றே. கோபுரம் வேறு. முன்பக்கம் பெரிய மண்டபம்.
இருபதடி உயர கர்ப்பக் கிருகம். பலிபீடம். மாடனுக்குக் கவலையாக
இருந்தது. அப்பியைத் தேடிப் போவதா, பயலே வருவானா என்று
இரண்டு நாளாகக் காத்திருந்தது. அப்போது அவனே வந்தான். உடம்பு
பளபளவென்று இருந்தது. வாயில் செழிப்பாக வெற்றிலை. குடுமியில்
நல்லெண்ணெய். ஷோக்காக இருந்தான்.

"ஏம்பில காணுயதுக்கே இல்லியே" என்றது மாடன்.

"அனாத்தாதியும் வேய்; நான் எண்ணும் வந்து பாத்துக்கிட்டு தான்
போறேன். நீருதான் மண்ணா கெடந்தீரு."

"பயந்து போட்டேன்டேய் அப்பி" என்றது மாடன் அசமஞ்சமாக
சிரித்தபடி.


"பயருவீரு. ஒக்கெ ஓம்மச்சுட்டித்தான் பாத்துக்கிடும். இப்பம் எப்பிடி
இருக்கேரு தெரியுமா?"

"எப்படி?"

"அடாடா, ஒரு கண்ணாடி இல்லாமப் போச்சே. சும்மா விஜெயகாந்த்
வில்லன் வேசம் கெட்டினதுமாதிரி இருக்கேரு. பட்டணத்திலேந்து
வந்தபய. பெயிண்ட் வச்சு கீசியிருக்கான். உம்ம மீசையிருக்கே அடாடா
. . ."

"சத்தியமாட்டு?" என்று மீசையைத் தொட்டபடி மகிழ்ந்து கொண்டது
மாடன்.

"பின்னே என்ன? இந்தால கோயிலு, எலக்ரிக் லைட். மாவெலத்
தோரணம். பித்தளையில் மணி . . . ராஜபோகம்தேன். நம்ம
மறந்திராதியும்."

"மறப்பனா?" என்றது மாடன் நன்றியுடன்.

அப்பி திடீரென்று அரைச் சிரிப்புடன் குரலைத் தாழ்த்தியவனாகக்
குனிந்து "நீரு செவனுக்க பிள்ளையாமே?" என்றான்.

மாடன் அதிர்ந்தது. "ஆரு சென்னா?"

"ஆரு செல்லணுமோ அவியதான். புராணம் பிள்ளைதான் சென்னாரு."

"ஏனக்கு அறிஞ்சு கூடாம்; காட்டில பெறந்தவன் எண்ணு
கேட்டிட்டுண்டு. அது காலம் கொற ஆச்சு."

"இருக்கும்வே" அப்பி அருகே வந்தான். "இப்பம் நாமெல்லாம் இருக்கம்,
காட்டுக் குட்டியவதான? ஆரு கண்டா. நம்ம அப்பன்மாரு, ஏமான்மாரு
இல்லை எண்ணு? அப்பம் கத அதாக்கும். ஹிஹிஹி . . ."

மாடனும் தர்ம சங்கடமாய்ச் சிரித்தது.

"எதுக்கும் இப்பம் அவியளே செல்லியாச்சு, ஒம்ம அப்பன் செவன்தான்
எண்ணு. வலிய கையாக்கும். ஒரு கெவுரவததான? பேயாம
கமுக்கமாட்டு இருந்து போடும். ஒமக்கு என்னவே, இப்பம் நீரு
ஏமான்மாருக்கும் சாமியில்லா?"

"வெளையாடதடேய் அப்பி" என்றது மாடன், வெட்கிச் சிரித்தபடி.

"உம்மாண. இப்பம் பிள்ளைமாருவ என்ன, செட்டிய என்ன, நாயம்மாரு
என்ன, அய்யமாரு என்ன . . . வாற சாதி சனமிருக்கே . . .
அடாடா! பயலுவளுக்குப் பந்தாவும் பெகளவும் காணணும். பறப்பயவ
வந்தா ஓரமாட்டு நின்னுகிட்டு பெய்யிடணும். இப்பம் பிரதிட்டெ

பண்ணேல்ல. இன்னி அதுவும் ஆச்சிண்ணு சென்னா, நீருதான்
கைலாசத்துக்கு வாரிசுண்ணு வச்சுக்கிடும்."

"ஹெ . . . ஹெ . . . ஹெ . . ." என்றது மாடன்.

"இந்தச் சிரிப்ப மட்டும் வெளிய எடுக்காதியும், ஏமான்பயவ
கண்டானுவண்ணு சென்னா அப்பமே எறக்கி வெளியில விட்டு
போடுவானுவ. தெய்வமிண்ணா ஒரு மாதிரி மந்தஹாசமாட்டு
இருக்கணும். இந்தால கையை இப்படிக் காட்டிக்கிட்டு..., வாளை
ஓங்கப்பிடாது. மொறைச்சிப் பார்க்கப்பிடாது . . ."

"என்னௌவுக்குடோய் அப்பி இதொக்கெ?" மாடன் சங்கடத்துடன்
கேட்டது.

"என்ன செய்ய? காலம் மாறிப் போச்சு. நாமளும் மாறாம இருந்தா
களியுமா? செல்லும்? கொஞ்சம் அட்ஜெஸ் செய்யும். போவப் போவச்
செரியா போவும். அது நிக்கட்டு; இப்பம் நானறியாத்த வல்ல
காரியத்திலயும் எறங்குதா மாடன்?"

"நீ அறியாத்த காரியமா? புண்ணில குத்தாத டேய் அப்பி."

"பின்ன இஞ்ச வாற பெண்ணுவளுக்கொக்கெ கெர்ப்பம்
உண்டாவுதாமே?"

மாடன் திடுக்கிட்டது. "நான் ஒரு பாவமும் அறியல்லடேய்;
கண்ணாணை ஒன்னாணை . . ." என்று பதறியது.

"நாலு ஊருக்கு ஒரே பெரளி. பிள்ளையில்லாத்த மலடியொ இஞ்ச
வாறாளுவ, பூஜை நடத்தியதுக்கு."

"நான் இஞ்ச என்னத்தக் கண்டேன்? லேய் அப்பி, எனக்கு
இதொண்ணும் ஒட்டும் பிடிக்கேல்ல கேட்டியா? சும்மா இருக்கியவனுக்கு
மேல, அதுமிதும் செல்லி பெரளி கௌப்பிவிடுயதுண்ணா சென்னா,
ஒரு மாதிரி அக்குறும்பா இல்ல இருக்குவு?"

"விடும்; விடும் வேய் மாடா. ஒக்கெ அம்மிணிய. ஒரு கெவுரவம்
தானேவேய் இதுவும்? நீரு பேயாம இரும்."

மாடன் சலிப்புடன் "அதென்னடேய் என்னமோ சென்னியே,
பிரதிட்டெ? அதினி என்னௌவு டேய் வச்சு கெட்டப் போறாவ நம்ம
தலைமேல?"

"மந்திரம் செல்லி யந்திரம் வச்சு அதுக்க மீத்த ஒம்ம தூக்கி
வைப்பாவ."

"என்னத்துக்குடேய்?" என்றது மாடன், பீதியுடன்.

"நல்லதுக்குதேன். ஒமக்கு சக்தி வரண்டாமா வேய்,
அதுக்காச்சுட்டித்தான் எண்ணு வையும்."

"சக்தியா?"

"சக்திண்ணா பெலன். வலிய நம்பூரி வாறார்."

"பிலெய் அப்பி; இந்தக் காடு போனப்பளே நமக்குப் பெலன் போச்சி.
இன்னியிப்பம் என்னலேய் புத்தனாட்டு ஒரு பெலன்?"

"அதொக்கெ பளைய கதையில்லா? இப்பமொக்கெ ஏதுவே காட்டுல
சாமி? இப்பம் பட்டணம் சாமிக்குத்தான் வேய் பெலன். பட்டும்
நகெயுமாட்டு போடுவாவ. படையல் போடுவாவ. எல்லாப் பெலனும்
மேப்படி மந்திரத்தில இருக்குவேய்."

"எனக்கும் போடுவாவளாடேய், நகெ?" என்றது மாடன் கூர்ந்து.

"கண்ணெப்பாரு. செம்மெ இருந்தீரு எண்ணு சென்னை போடம
இருப்பினுமா?"

"எலெய் அப்பி, நல்லதாட்டு ஒரு அட்டியெ பண்ணிப் போடச்
செல்லுடேய் . . ."

"போற போக்கப் பாத்தா ஏமான்மாரு ஒமக்குப் பூணூலே
போட்டுருவானுவ எண்ணுதான் தோணுது. ஏதோ ஏளய மறக்காம
இருந்தா போரும்."

"நீ நம்ம ஆளுடேய்" என்றது மாடன். "நான் எங்க இருந்தாலும்
ஒன்னிய மறக்க மாட்டேன் பாத்துக்க . . ."

======
ஐந்து
======

உற்சாகமாய்த்தான் இருந்தது. கோவிலுக்கு முன் பெரிய பலிபீடம்.
அதைப் பார்த்தபோதே மாடனுக்கு ஜொள்ளு ஊறியது. விசாலமாக
முற்றம். முற்றம் நிறைய பலி! மீண்டும் பழைய நாட்கள்!

பழைய நாட்கள் புதுப் பொலிவுடன் திரும்புவது போலத்தான்
தோன்றியது. கோவில் கட்டி முடிந்து, திறப்புவிழாவும் பிரதிஷ்டை மகா
கர்மமும் நிச்சயிக்கப்பட்டது. உற்சாகம் கொண்ட ஜனத்திரள் வந்து
குழுமியது. பொருட்காட்சிகள், தெருக்கடைகள், ரங்கராட்டினம்,
நாலுதலை ஆடு, கம்பி சர்க்கஸ் என்று திருவிழாக் கோலாகலம்.
குழந்தைகள் முன்புபோலத் தன்மீது ஏறி விளையாட முடியாதது
மாடனுககு என்னவோ போல இருந்தது. சுற்றியும் கம்பிவேலி
போடப்பட்டிருந்தது. மந்திரியும், மகாதானபுரம் வைபவானந்த

சரஸ்வதியும் வந்தனர். பூர்ண கும்ப மரியாதை, தங்கக் கிரீடம் வைத்து
வரவேற்பு. சட்டையற்ற மேனியில் வியர்வையும் பூணூலும் நௌ¤ய
குடுமிக்காரர்கள் குறுக்கும் நெடுக்கும் ஓடினர். வளமுறைப்படி, நாயரும்
பிள்ளையும் ஒரே சாதிதானா, இல்லை வேறுவேறா என்ற விவாதம்
எழுப்பப்பட்டு, பார்க்கவன் நாயரின் பல், ஆனையப்ப பிள்ளையின்
கண், விலக்கப்போன நடேச பிள்ளையின் மூக்கு ஆகியவை
சேதமடைந்தன. நம்பூதிரியின் சகல ஜாதியினரையும் அதட்டினர். பிறர்
முறைப்படி கீழே உள்ள ஜாதியினரை அதட்டினர். சர்க்கரைப்
பொங்கலின் குமட்டும் மணத்தை மாடன் உணர்ந்தது. "இந்தக்
குடுமிப்பயவ இந்த எளவை எப்பிடியேன் திங்கியாவளோ? சவத்தௌவு,
எண்ணை நாத்தமில்லா அடிக்குவு . . ." என்று மாடன் வியந்து
கொண்டது.

பெரிய நம்பூதிரி மைக் வைத்து, டேபிள் ஃபேன் ஓட, தூபம் வளர்த்து,
அதில் நெய்யும் பிறவும் அவிஸாக்கி, இருபத்தி நாலு மணி நேர வேத
கோஷத்தில் ஈடுபட்டிருந்தார். மணிக்கணக்காகக் கேட்டுக்கொண்டிருந்த
அதன் அந்த மாற்றமற்ற ராகம் குஞ்சன் மூப்பனின் பசுமாடு, தெரு
முக்குச் சோனி நாய் ஆகியவற்றைப் பாதிப்படையச் செய்து தங்களை
அறியாமலேயே அதே ராகத்தில் குரலெழுப்பும்படி அவற்றையும்
மாற்றியது. மாடனின் பொறுமை கரைந்து கொண்டிருந்தது.
யாரையாவது நாவாரத் திட்ட வேண்டும் போல இருந்தது. சுற்றிலும்
கம்பிவேலி. ஜனத்திரள். அப்பியை வேறு காணவில்லை.

யந்திரபூஜை நடந்து கொண்டிருந்தபோது அப்பி வந்தான். மாடன்
பிரகாசம் பெற்றது. அப்பியில் அந்த உற்சாகமான வாசனை வந்தது.

"எரிப்பன் பெலமாடோய் அப்பி?" என்றது மாடன்.

அப்பி பொல பொலவென்று அழுதுவிட்டான்.

"ஏம்பிலேய் அப்பி?" என்று மாடன் பதறியது.

"நல்லாயிரும்; ஏழெயெ மறந்திராதியும்."

"என்னலேய் அப்பி, இப்பம் என்னத்துக்கு டேய் இப்பிடி கரையுதே?"
என்றது மாடன்.

"உள்ளர விடமாட்டோமிண்ணு செல்லிப் போட்டாவ."

"மாடன் அதிர்ந்தது. "ஆரு?"

"அய்யமாரு"

"ஏம்பிலேய்?"


"பிராமணங்க மட்டும்தேன் உள்ளே போலாமிண்ணு சென்னாவ.
மந்திரம் போட்ட எடமில்லா?"

"அப்பம் என்னையும் உள்ளார விடமாட்டானுவண்ணு செல்லு."

"நீரு எங்க? நீரு தெய்வமில்லா."

மாடன் ஏதும் கூறவில்லை.

"அப்பம் இனி எண்ணு காணுயது?" என்று சற்று கழித்து, பேச்சை
மாற்ற, கேட்டது.

"நீரு வாருமே என்னைத்தேடி."

"பிலேய் அப்பி" என்றது நெகிழ்ந்துபோன மாடன். "நான் எங்க
இருந்தாலும் ஒனக்க மாடன் தாம்பில. ராத்திரி வாறேன். எரிப்பன்
வாங்கி வயி."

"பைசா?"

"பிரஜைகள் இவ்வளவுபேரு இருக்காவ?"

"வயிறெரியப் பேயாதியும் வேய். அந்தாலப் பாத்தீரா உண்டியலு?
அண்டா மேதிரி இருக்கு. அதிலக் கொண்டு செண்ணு இடுதானுவ.
மாடன்சாமிக்குத் தாறோம் உனக்கெதுக்கு இங்காவ."

"என்னலேய் அப்பி, இப்பிடியொக்கெ ஆயிப்போச்சு காரியங்க?"
என்றது மாடன்.

"ஆருடா அது, மாடன் சாமியைத் தொடுறது?" என்றது ஒரு குரல்.
பொன்னு முத்து நாடான் கம்புடன் ஓடிவந்தான்.

"ஈனச்சாதிப் பயலே. சாமியைத் தொட்டா பேசுதே? ஏமான் ஏமான்
ஓடி வாருங்க . . ."

ஸ்ரீகாரியம் ராமன் நாயரும், தர்மகர்த்தா கள்ளர்பிரான் பிள்ளையும் ஓடி
வந்தனர்.

"ஓடு நாயே. குடிச்சுப்புட்டு வந்திருக்கான். ஓடு. இந்தப் பக்கம் தலை
காட்டினா கொண்ணு போடுவேன்" என்றார் பிள்ளை

.

"கேடியாணு, மகாகேடியாணு" என்று ராமன் நாயர் தர்மகர்த்தா
பிள்ளையைச் சுற்றிக் குழையடித்தான்.

அப்பி தள்ளாடியபடி விலகி ஓடினான். இருமுறை விழுந்தான்.
தூரத்தில் நின்றபடி அவன் அழுவதும், மாடனை நோக்கிக் கையை
நீட்டியபடி ஏதோ கூவுவதும் தெரிந்தது.

மாடனுக்கு மார்பை அடைத்தது. ஆயினும், அதன் மனம் விட்டுப்
போகவில்லை. இன்னமும் ஒரே நம்பிக்கை பலிதான். எது
எப்படியென்றாலும் இனி வருஷாவருஷம் கொடை உண்டு; பலி
உண்டு. கும்பி கொதிக்கக் காத்திருக்க வேண்டியது இல்லை.
அதுபோதும். அதற்காக எந்தக் கஷ்டத்துக்கு உள்ளாகவும் தயார்தான்.

வெயில் சாய ஆரம்பிக்கும்வரை பூஜையும் மந்திரச் சடங்குகளும்
இருந்தன. அதன் தந்திரி நம்பூதிரி முன்னால் வர, ஒரு பெரிய கூட்டம்
மாடனைச் சூழ்ந்தது. தூபப் புகையும், பூக்களும் மாடனுக்குத்
தலைவலியைத் தந்தபோதும்கூட மரியாதைகள் அதன் நொந்த மனசுக்கு
சற்று ஆறுதலாகவே இருந்தன. பிற்பாடு மாடன் பெரிய கிரேன்
ஒன்றின் உதவியுடன் தூக்கி உள்ளே கொண்டு செல்லப்பட்டு, யந்திர
பீடத்தின்மீது அமர்த்தப்பட்டது.

மாடன் அறையை நோட்டம் விட்டது. நல்ல வசதியான அறைதான்.
'எலட்டிக்லைட்' உண்டு. காற்றோட்டம் உண்டு. முக்கியமாக மழை
பெய்தால் ஒழுகாது. திருப்தியுடன் தன் வாயைச் சப்பிக் கொண்டது.
என்ன இழவு இது, பூஜைக்கு ஒரு முடிவே இல்லையா? சட்டு
புட்டென்று பலியைக் கொண்டு வந்து படைக்க வேண்டியது தானே?
எத்தனை வருஷமாகக் காத்திருப்பது. ஆக்கப் பொறுத்தாயிற்று, ஆறவும்
பொறுத்து விடலாம்.

இரவான பிறகுதான் சகல பூஜைகளும் முடிந்தன. நம்பூதிரி குட்டிப்
பட்டரை நோக்கிப் "பலி கொண்டு வாங்கோ" என்றார். மாடனின்
காதும், தொடர்ந்து சர்வாங்கமும் இனித்தன. அதன் ஆவல் உச்சத்தை
அடைந்தது. தந்திரி நம்பூதிரி பலி மந்திரங்களைச் சொல்ல
ஆரம்பித்தார். "அவனும், அவனுக்க எளவெடுத்த மந்திரமும்" என்று
சபித்தபடி, பலிவரும் வழியையே பார்த்தது, மந்திரத்தினால் ஒரு
மாதிரியாக ஆகிவிட்டிருந்த மாடன்.

நாலு பட்டர்கள் சுமந்து கொண்டு வந்த அண்டாவைப் பார்த்ததும்
மாடன் திடுக்கிட்டது. ஒருவேளை இரத்தமாக இருக்கலாம் என்று சிறு
நம்பிக்கை ஏற்பட்டது. மறுகணம் அதுவும் போயிற்று. சர்க்கரைப்
பொங்கலின் வாடை மாடனைச் சூழ்ந்தது. என்ன இது என அது
குழமப, தந்திரி பலி ஏற்கும்படி சைகை காட்டினார். "ஆருக்கு,
எனக்கா?" என்று தனக்குள் சொன்னபடி ஒரு கணம் மாடன்
சந்தேகப்பட்டது. மறுகணம் அதன் உடம்பு பதற ஆரம்பித்தது. வாளை
ஓங்கியபடி, "அடேய்" என்று வீரிட்டபடி, அது பாய்ந்து எழ முயன்றது.
அசையவே முடியவில்லை. பாவி அய்யன் மந்திரத்தால் தன்னை யந்திர
பீடத்தோடு சேர்த்துக் கட்டிவிட்டதை மாடன் பயங்கரமான பீதியுடன்
உணர்ந்தது.

***

1989 ல் எழுதப்பட்டது .முதல் பிரசுரம் - 1991 புதிய நம்பிக்கை
மும்மாத இதழில் . திசைகளின் நடுவே தொகுப்பில் உள்ளது .[
கவிதாபதிப்பகம் மறுபிரசுரம் 2002 .]

Read at other resources:

http://www.jeyamohan.in/?p=550
http://azhiyasudargal.blogspot.com/2010/04/blog-post_27.html